தற்போதைய அரசாங்கம் கர்வத்துடன் செயல்படாமல் மீனவர் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்க வேண்டும்: மஹிந்த அமரவீர வலியுறுத்து
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர, கரைவலை மீன்பிடித் தொழிலுக்கு எனது அமைச்சுக் காலத்திலேயே அனுமதி வழங்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உண்மையானவை என உறுதிப்படுத்தினார். அன்று தாம் எடுத்த அந்தத் தீர்மானத்தின் காரணமாகவே இன்று சந்தையில் மீன் விலை ஓரளவேனும் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், இது குறித்த போதிய புரிதல் தற்போதைய அமைச்சர்களுக்கு இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வரப் பாடுபட்ட மீனவ மக்களே இன்று பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டார்.
மீன்பிடி நடவடிக்கைகளால் சூழல் பாதிப்பு ஏற்படுமானால் அதற்கு விஞ்ஞானபூர்வமான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்த அவர், ‘பாட்டம் ட்ரோலிங்’ (Bottom Trawling) எனப்படும் இழுவை மடி மீன்பிடி முறையினால் கடலில் ஒரு மீன்குஞ்சு கூட எஞ்சாத நிலை ஏற்படும் என எச்சரித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்த பொருளாதார வேலைத்திட்டங்களையே இந்த அரசாங்கமும் தொடர்வது மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், அரசாங்கம் கர்வத்துடன் செயல்படாமல் மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.
நாட்டின் விவசாயத் துறை குறித்து கருத்து தெரிவிக்கையில், தற்போது நெல் கொள்வனவு செய்வதற்கான முறையான திட்டம் ஏதும் இல்லை எனவும், விவசாயிகளுக்கான உர மானியம் இதுவரை வழங்கப்படவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.
அத்துடன், ‘டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட விவசாயப் பாதிப்புகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் வெறும் 6% மாத்திரமே நிவாரணங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், தாம் அரசாங்கத்தைக் கவிழ்க்கத் தயாராக இல்லை என்றும் ஆனால் மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
திருகோணமலை தேரர்கள் தொடர்ந்தும் சிறை வைக்கப்பட்டுள்ளமை மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு விசாரணைகளில் உள்ள சிக்கல்கள் குறித்தும் தனது நிலைப்பாட்டை அவர் இதன்போது வெளிப்படுத்தினார்.
‘டிட்வா’ சூறாவளியைக் காரணம் காட்டி மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைக்க அமைச்சர்கள் முயற்சிப்பது, கடந்த அரசாங்கங்கள் பின்பற்றிய அதே முறையையே பிரதிபலிப்பதாக அவர் சாடினார். இறுதியாக, மீனவர் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகத் தனது காலப்பகுதியில் இந்தியத் தரப்புடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் குறித்தும் அவர் ஊடகவியலாளர்களுக்கு விரிவான விளக்கமளித்தார்.

