அனுர அரசில்  சுதந்திர தினம்:வடக்கைப் பொறுத்தவரை ஒரு கரிநாளாகப் பார்க்கப்பட முடியாது:வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவிப்பு

Meiveli Media Team

மாற்றத்துக்கான ஒரு புதிய சகாப்தத்தில் நாம் இப்போது அடியெடுத்து வைத்திருக்கின்றோம். அந்த மாற்றத்தின் மீது நம்பிக்கை வைக்குமாறு அன்புடன் அழைக்கின்றேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இலங்கையின் சுதந்திர நாள் உரையில் அழைப்பு விடுத்தார்.இலங்கையின் 78ஆவது தேசிய சுதந்திர தின விழா வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் இன்று  கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபைக்கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.

வரலாற்றில் முதன்முறையாக ஜனாதிபதி செயலகத்தின் விசேட பணிப்புரைக்கு அமைவாக மாகாண மட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந் நிகழ்வில் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றும் போதே ஆளுநர் இதனைத் தெரிவித்தார். சுதந்திர தினம் என்பது வடக்கைப் பொறுத்தவரை கடந்த காலங்களில் ஒரு கரிநாளாகப் பார்க்கப்பட்டது. எனினும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் ‘சொற்களை விட செயலே முக்கியம்’ என்ற அடிப்படையில் நம்பிக்கையைத் துரிதமாகக் கட்டியெழுப்பி வருவதாகத் தெரிவித்தார்.பல தசாப்தங்களாக விடுவிக்கப்படாமல் இருந்த காணிகள் எவ்வித அரசியல் நிபந்தனையுமின்றி உரிமையாளர்களிடம் விடுவிக்கப்படுவது நல்லாட்சிக்கான சிறந்த சான்றாகும்.

அண்மையில் ஏற்பட்ட ‘டித்வா’ சூறாவளிப் பேரனர்த்தத்தின் போது வடக்கு மாகாண சபைக்குப் போதிய நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவித்திருந்ததாலும் நாம் தனித்து விடப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வடக்கு மாகாண ஆளுநர் சுட்டிக்காட்டினார்.