‘நல்லாட்சி’ காலத்தில் பொய்களைப் பரப்பியவர்கள் அரச நிறுவனங்கள் ஊடாக அவற்றை நியாயப்படுத்த முற்படுகின்றனர்: நாமல் ராஜபக்ஷ சாடல்
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

‘நல்லாட்சி’ அரசாங்க காலப்பகுதியில் திட்டமிட்டு பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்த நபர்கள், தற்போது நீதிமன்றம், பொலிஸ் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் உள்ளிட்ட அரச நிறுவனங்களைப் பயன்படுத்தி அந்தப் பொய்களை உண்மையென நிலைநாட்ட முயற்சிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மாத்தறை, கம்புருபிட்டிய பகுதியில் நடைபெற்ற ‘கமின் கமட்ட’ மக்கள் சந்திப்பின் போது ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், இவ்வாறான நடவடிக்கைகள் அரச வளங்களை பாரியளவில் துஷ்பிரயோகம் செய்யும் செயல் என்றும், இது நாட்டின் நிறுவனக் கட்டமைப்பையும் சமூக ஒருமைப்பாட்டையும் சீர்குலைக்கும் என்றும் எச்சரித்தார்.
ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கங்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதற்காக கடந்த காலத்தில் பெருமளவிலான பணம் செலவிடப்பட்டதாக ‘நல்லாட்சி’ நிர்வாகத்துடன் தொடர்புடையவர்களே தற்போது பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளதோடு, இதில் பின்னணியில் இருந்த அமைப்புகள் மற்றும் கட்சிகள் குறித்தும் வெளிப்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறு சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை தற்போது பொதுமக்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்தி அரச நிறுவனங்கள் ஊடாக நியாயப்படுத்த முயற்சிப்பது ஒரு பாரிய குற்றமாகும் எனத் தெரிவித்த அவர், தனிப்பட்ட பழிவாங்கல் மற்றும் சமூகப் பிரிவினையைத் தூண்டும் வகையில் அரசாங்கம் முன்னெடுக்கும் இவ்வாறான பொய்ப் பிரசாரங்களுக்குப் பொறுப்பானவர்கள் எதிர்காலத்தில் நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் வலியுறுத்தினார்.
இதேவேளை, மகா சங்கத்தினரின் ஆசீர்வாதத்துடன் மாத்தறை மாவட்டத்தின் பல தொகுதிகளில் ‘கமின் கமட்ட’ வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களுடன் இணைந்து கட்சியை அரசியல் ரீதியாகப் பலப்படுத்தும் பணிகள் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்கனவே ஒரு பலமான அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ள நிலையில், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் மற்றும் பிரதேச சபைத் தேர்தல்களில் தமது கட்சி அமோக ஆதரவுடன் வலுவான நிலையில் இருக்கும் என்றும் நாமல் ராஜபக்ஷ இதன்போது நம்பிக்கை வெளியிட்டார்.

