கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் தொடர்ச்சியே ‘கிவுல் ஓயா’ நீர்த்தேக்க திட்டம் : தமிழர் மரபுரிமை பேரவை கண்டனம்

Meiveli Media Team

 

கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் தொடர்ச்சியே ‘கிவுல் ஓயா’ நீர்த்தேக்க திட்டம் என தமிழர் மரபுரிமை பேரவை இணைத் தலைவர் அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங் கண்டனம் வெளியிட்டார். தமிழர் மரபுரிமை பேரவை வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மாகாவலி அதிகார சபையினால் வெளியிடப்பட்டிருக்கின்ற திட்ட அறிக்கையின் படி கிவுல் ஓயா நீர்த்தேக்கமானது வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரவில் உள்ள தமிழர்களின் பூர்வீகக் கிராமமான வெடிவைத்த கல்லு கிராமத்திற்கு அண்மையாக வட கிழக்கு திசையாக மகாவலி அதிகார சபையினால் அமைக்கப்படவுள்ள மிகப்பாரிய நீர்த்தேக்கமாகும். மகாவலி அதிகாரசபை தனது திட்ட அறிக்கையில் வெளிப்படையாகவே இந்த நீர்த்தேக்கத்தின் பயனாளிகள் 3203 சிங்களக் குடும்பங்கள் என தெரிவித்துள்ளது. 37 மீற்றர்கள் உயரமான அணையின் மூலம் உருவாக்கப்படவுள்ள இந்த நீர்த்தேகத்தின் எல்லைகள் தற்பொழுது மகாவலி அதிகார சபையினால் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் எல்லைக் கல்லிடப்பட்டு காட்டப்பட்டுள்ளன.

இதன்படி பாரம்பரிய தமிழ் கிராமங்களான வெடிவைத்த கல்லு, ஈச்சங்குளம், கூழாங்குளம், காட்டுப்புஸ்ரீவரசங்குளம் காஞ்சிரமோட்டை போன்ற கிராமங்களின் 400 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய மற்றும் குடியிருப்பு நிலங்கள் நீரினுள் மூழ்கும் நிலை காணப்படுகின்றது. மேலும் 1921இல் வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஒதுக்கு காடாக அறிவிக்கப்பட்ட பெரிய கட்டிக்குளம் ஒதுக்குக்காட்டில் 4000 ஏக்கரும் இந் நீர்த்தேக்கத்தில் அமிழ்ந்து போவதுடன் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் அடையாளப்படுத்தப்பட்ட 47 தொல்லியல் பிரதேசங்களும் கிவுல் ஓயாவினுள் மூழ்கிப்போகவுள்ளது என்பதனை மகாவலி அதிகார சபையின் திட்ட அறிக்கையின் மூலம் அறிந்துகொள்ள முடிகின்றது. இந் நீர்த்தேக்கத்திற்கு மிக அண்மையாக உள்ள சைவ வழிபாட்டு இடமான வெடுக்குநாறிமலை பிரதேசத்தினை தொல்லியல் இடமெனக்கூறி தமிழ் மக்களின் வழிபாட்டினை தடைசெய்யும் தொல்லியல் திணைக்களம் இந்த 47 தொல்லியல் பிரதேசங்களினையும் கிவுல் ஓயாவினுள் நீரினுள் மூழ்கிப்போவதற்கு தனது இசைவினை தெரிவித்துள்ளமை தமிழர் பூர்வீக நிலங்களில் அமைந்துள்ள இத் தொல்லியல் சின்னங்கள் தமிழர் மரபுரிமை சார்ந்தவையாக அமைந்திருப்பதனாலேயே என சந்தேகிக்க ஏதுவாகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கொக்குத் தொடுவாய் மத்தி, கொக்குதொடுவாய் வடக்கு, கொக்குத்தொடுவாய் தெற்கு, கருநாட்டுக்கேணி ஆகிய கிராம அலுவலர் பிரிவுக்குரிய ஆமையன்குளம், உந்தராயன் குளம், அடையகர்த்தான், படுகாட்டுக் குளம், சாம்பான் குளம் போன்ற 2000 ஏக்கர் வளமான விவசாய நிலங்கள் தமிழ் மக்களிடமிருந்து அபகரிக்கப்பட்டு சிங்கள மக்களிற்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது கிவுல் ஓயா திட்டத்தின்கீழ் இது மேலும் விஸ்திரிக்கப்பட்டு கொக்குத்தொடுவாய் சூரியநாற்றுப் பகுதியில் தமிழ் மக்களுக்கு மத்தியவகுப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 1990 ஏக்கர் காணிகள் கிவுல் ஓயா திட்டத்தில் உள்வாங்கப்பட்டு திட்ட வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது.திட்டமிடப்பட்ட நில அபகரிப்பையும் வடபகுதியின் இனப்பரம்பல் கோலத்தினை மாற்றுவதனை இலக்காக கொண்டு காலத்திற்கு காலம் ஆட்சிபீடமேறும் அரசுகள் காய்நகர்த்தி வருவது வெளிப்படையாகவே அவதானிக்கப்படுகிறது. இவையெல்லாவற்றினையும் மூடிமறைத்து மீன்பிடித்துறை அமைச்சர் சந்திரசேகரன்இ இது தொடர்பாக தமிழ் அரசியல்வாதிகள் கூறுவது பொய் எனக் கூறியிருப்பதை தமிழர் மரபுரிமை பேரவை வன்மையாக கண்டிக்கின்றது.  இலங்கைத்தீவில் நிலையான அபிவிருத்தி சமாதானம் சமத்துவம் நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமாயின் இவ்வாறான திட்டமிட்ட இன அழிப்பினுடாக அதனை ஒருபோதும் அடைய முடியாது என்பதனை அரசிற்கு சுட்டிக்காட்டுகின்றோம் அதற்கு எதிராக தமிழ மக்கள் தொடர்ச்சியாக போராடுவார்கள் என்பதனையும் தெரிவித்துக்கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.