பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் போராட்டக் களத்திற்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம்
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் தொடர்ந்து நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வரும் உண்ணாவிரதப் போராட்டக் களத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் இன்று பிற்பகல் நேரில் விஜயம் செய்தார்.
நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள தமது தொழில்சார் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை வலியுறுத்தி, போராட்டக் களத்தில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்களைச் சந்தித்த அவர், அவர்களின் கோரிக்கைகள் மற்றும் தற்போதைய உடல்நிலை குறித்து விரிவாகக் கேட்டறிந்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், நாட்டின் கல்வித் துறையில் மிக முக்கிய பங்காற்றும் இந்த உத்தியோகத்தர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசாங்கம் இனியும் அலட்சியப்படுத்தக் கூடாது என வலியுறுத்தினார்.
ஒரு உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படும் சூழலில், அதன் பாரதூரத்தை உணர்ந்து ஆட்சியாளர்கள் உடனடியாகச் செயற்பட வேண்டும் எனவும், இவர்களின் பிரச்சினைகளை பாராளுமன்றத்திலும் உரிய அமைச்சின் கவனத்திற்கும் தான் கொண்டு செல்லவுள்ளதாகவும் அவர் இதன்போது உறுதியளித்தார். மேலும், கடந்த காலங்களில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் வெறும் பேச்சளவில் மாத்திரம் இருக்கக் கூடாது என சுட்டிக்காட்டிய அவர், அமைச்சரவை மட்டத்தில் இதற்கான முறையான தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். இந்தப் போராட்டம் ஒரு நியாயமான தீர்வை எட்டும் வரை பாதிக்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்குத் தனது முழுமையான ஆதரவு இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

