நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் ரத்து செய்யப்பட்டால் ஊழல் அதிகரிக்கும்: உதய கம்மன்பில எச்சரிக்கை

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியக் கொடுப்பனவை ரத்து செய்வதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானமானது, அரசியல்வாதிகள் மத்தியில் ஊழல் மற்றும் மோசடிகள் அதிகரிப்பதற்கே வழிவகுக்கும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
எதுல்கோட்டேயிலுள்ள அக்கட்சியின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்வது தொடர்பான பிரபலமான தீர்மானம் ஏன் எடுக்கப்பட்டது என்பது குறித்து ஆராயாமல், இத்தகைய முடிவுகளை எடுப்பது தவறான முன்மாதிரியாக அமைந்துவிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கான வரலாற்றுப் பின்னணியை விளக்கிய அவர், 1947 முதல் 1970 வரை நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய பல சிரேஷ்ட அரசியல்வாதிகள், 1970 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் வாழ்வாதாரத்திற்காகப் பெரும் போராட்டங்களை எதிர்கொண்டதாகக் குறிப்பிட்டார். அக்காலகட்டத்தில் நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதிக்கு முன்பாக முன்னாள் உறுப்பினர்கள் வெறும் ஐந்து ரூபாய் கடன் கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட அவலநிலை காணப்பட்டதாகவும், இதனை நேரில் கண்ட அப்போதைய பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, அரசியல்வாதிகள் தமது எதிர்காலத்தைக் கருதி ஊழலில் ஈடுபடுவதைத் தடுக்கவும், அவர்களின் கௌரவமான வாழ்வை உறுதிப்படுத்தவுமே 1977 இல் இந்த ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார் என்றும் கம்மன்பில நினைவு கூர்ந்தார்.
மேலும், சுதந்திரக் கல்வியின் தந்தையான கன்னங்கர அவர்கள் வாழ்வதற்கு வழியின்றி பிரதமர் டட்லி சேனநாயக்கவிடம் உதவி கோரி கடிதம் எழுதிய வரலாற்றையும், முன்னாள் அமைச்சர் விமலா கண்ணங்கர போன்றவர்கள் தமது சொத்துக்களை அரசுக்குத் தானமாக வழங்கிவிட்டு, இறுதிக் காலத்தில் வீட்டு வாடகை கூட செலுத்த முடியாத நிலையில் வாழ்ந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார். இத்தகைய அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய பல அரசியல்வாதிகள் இன்றும் இந்த ஓய்வூதியத்திலேயே உயிர் வாழ்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே, தற்போது வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியக் கொடுப்பனவை ரத்து செய்தால், பதவியில் இருக்கும் காலத்திலேயே அரசியல்வாதிகள் தமது எதிர்காலத் தேவைகளுக்காகவும் பாதுகாப்பிற்காகவும் ஊழல் மோசடிகள் ஊடாக நிதி சேகரிக்கத் தொடங்குவார்கள் என்றும், இது நாட்டின் அரசியல் கலாச்சாரத்தை மேலும் சீர்குலைக்கும் என்றும் அவர் எச்சரித்தார். இதன் காரணமாக, அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், உணர்ச்சிவசப்பட்டு எடுக்கப்படும் இத்தகைய முடிவுகள் நீண்டகால அடிப்படையில் நாட்டுக்குத் தீங்கையே விளைவிக்கும் என்றும் உதய கம்மன்பில மேலும் வலியுறுத்தினார்.