கலைஞர்களின் ‘இதய சங்கமம்’: மூத்த கலைஞர் செல்வம் பெர்னாண்டோ அவர்களுக்கு கௌரவிப்பு!
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இலங்கையின் புகழ்பெற்ற நடிகையான திருமதி சாந்தா அவர்களின் தலைமையில், இலங்கை தமிழ் கலைஞர்களின் பங்களிப்புடன் மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘கலைஞர்களின் இதய சங்கமம்’ நிகழ்வு நேற்று முன்தினம் கொழும்பு 6 ஹோட்டல் சபையரில் (Hotel Sapphire) நடைபெற்றது.
கலைத்துறையில் நீண்டகாலமாகப் பங்காற்றி வரும் கலைஞர்களை ஒன்றிணைக்கும் ஒரு பொழுதுபோக்கு நிகழ்வாகவும், அவர்களைக் கௌரவிக்கும் ஒரு கௌரவிப்பு விழாவாகவும் இது அமைந்திருந்தது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக உலகப் புகழ்பெற்ற அறிவிப்பாளர் திரு பி.எச். அப்துல் ஹமீத் அவர்கள் கலந்துகொண்டதோடு, அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ‘கூத்தாடி’ திரைப்படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான செல்வின் தாஸ் மற்றும் அவுஸ்திரேலிய தயாரிப்பாளர் என்.எஸ். தனபாலசுந்தரம் ஆகியோர் இந்நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற பெரும் ஆதரவை வழங்கியிருந்தனர்.

இந்நிகழ்வின் ஒரு முக்கிய அங்கமாக, வானொலி, நாடகம் மற்றும் திரைப்படத் துறை என கலை உலகில் ஆறு தசாப்தங்களுக்கும் மேலாகத் தனது அர்ப்பணிப்பை வழங்கிய மூத்த கலைஞர் திருமதி செல்வம் பெர்னாண்டோ அவர்கள் கௌரவிக்கப்பட்டார். சிறந்த துணை நடிகைக்கான ஜனாதிபதி விருது பெற்ற இவருடைய 79-வது பிறந்தநாளை முன்னிட்டு பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டதோடு, அவருடைய கலைப் பயணத்தைப் பாராட்டி 25,000 ரூபாய் பணப்பரிசும், நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

சர்வதேச மனித உரிமைகள் குழுவின் துணைத் தலைவர் டாக்டர் எம்.என். முகமது நலீம், என்.ஈ. புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் சியாவுல் ஹசன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் இந்த கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
தொடர்ந்தும், கணவனை இழந்த பெண் ஒருத்தி தனது மகனுடன் இந்த சமூகத்தில் எதிர்கொள்ளும் சவால்களை மையமாகக் கொண்ட ‘ஜெய்வின் புரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில்’, இயக்குநர் அர்ஷாத் நிஜாம் இயக்கத்தில் வெளியான ‘ஜடம்’ என்ற குறுந்திரைப்படம் விழாவில் திரையிடப்பட்டது.
திருமதி சாந்தா அவர்களின் தயாரிப்பிலும் நடிப்பிலும் உருவான இத்திரைப்படத்தில் நடிகை சாந்தனாவுடன் விக்னேஷ், வினோஷ் மற்றும் மாஸ்டர் பிரனுஹாசன் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அத்துடன் படத்திற்கு ஷமீல் ஜே இசையமைக்க, வினோத்ரோன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். படத்தின் விறுவிறுப்பைக் கூட்டும் வகையில் கே.எஸ். கண்ணன் படத்தொகுப்பு பணிகளையும், நிராசாமி கலை இயக்கத்தையும் கவனித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தில் பணியாற்றிய கலைஞர்களை சியாவுல் ஹசன் அவர்கள் பாராட்டி கௌரவித்தார்.
மூத்த கலைஞர் செல்வம் பெர்னாண்டோ அவர்களின் வரலாறு மற்றும் கலைப் பங்களிப்பு குறித்து உலக அறிவிப்பாளர் பி.எச். அப்துல் ஹமீத் அவர்கள் சிறப்புரையாற்றியதுடன், கலைஞர்களின் நலன் மற்றும் கலைத்துறையின் வளர்ச்சி குறித்த கருத்துக்களுடன் இந்த இதய சங்கமம் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

