கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பாக அரசாங்கத்திற்குள்ளேயே முரண்பாடு: ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்திக்குள் எவ்வித கருத்து வேறுபாடுகளும் இல்லை என்றும், இது குறித்து அரசாங்கத்திற்குள்ளேயே பாரிய முரண்பாடுகள் காணப்படுவதாகவும் கோட்டை மாநகர சபை உறுப்பினர் சமத் விஜேசுந்தர தெரிவித்தார்.
எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர்,
கல்விச் சீர்திருத்தங்களை ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்பதாக அரசாங்கத் தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரித்தார். இந்நாட்டிற்கு கல்விச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியது தமக்குப் பழக்கமான அரசியல் முகாம்களைச் சேர்ந்த சிரேஷ்ட அரசியல்வாதிகளே எனக் குறிப்பிட்ட அவர், தமது கட்சி ஒருபோதும் சீர்திருத்தங்களுக்கு எதிராகச் செயற்படவில்லை என்றும், அரசாங்கம் முன்வைத்துள்ள திட்டங்களில் உள்ள குறைபாடுகளையும் நடைமுறைச் சிக்கல்களையும் மட்டுமே சுட்டிக்காட்டியதாகவும் விளக்கமளித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பாக மகாநாயக்க தேரர்களைச் சந்தித்த போது பிரதமர் ஹரிணி அமரசூரிய இத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதாகக் குறிப்பிட்ட போதிலும், இறுதியாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இச்சீர்திருத்தங்களை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். இதிலிருந்து ஜே.வி.பி மற்றும் தேசிய மக்கள் சக்திக்கு இடையில் பாரிய கொள்கை முரண்பாடு இருப்பது உறுதியாகியுள்ளதாகவும், அரசாங்கம் தனது உள்வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள வேண்டுமே தவிர, அதற்காக எதிர்க்கட்சியைக் குறை கூறக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் பாடசாலைகளுக்கு ‘ஸ்மார்ட்’ வகுப்பறைகளை வழங்கிய போது அதனை ஏளனம் செய்தவர்கள், இன்று கல்விச் சீர்திருத்தங்களுக்குத் தொழில்நுட்ப வசதிகள் அவசியம் எனக் கூறுவது வேடிக்கையானது என அவர் சாடினார்.
இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட “ஐக்கிய கல்வி சம்மேளனத்” தலைவர் பிரியந்த பத்தேபெரிய கருத்துத் தெரிவிக்கையில், முறையான கலந்துரையாடல்கள் இன்றி ஆசிய அபிவிருத்தி வங்கியின் தேவைக்காக அரசாங்கம் அவசரமாக இந்தச் சீர்திருத்தங்களைக் கொண்டுவர முயன்றதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டார். பாடசாலைகளின் உட்கட்டமைப்பு மற்றும் மனித வளத்தை மேம்படுத்தாமல், ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சியளிக்காமல் இவ்வாறான மாற்றங்களைச் செய்ய முடியாது என அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், கல்விச் சீர்திருத்தங்கள் தோல்வியடைந்தமைக்கும், அதனைத் திரும்பப் பெற்றமைக்கும் கல்வி அமைச்சராகப் பிரதமர் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். எவ்வாறாயினும், மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில் தவறுகளைத் திருத்தி முறையான கல்விச் சீர்திருத்தங்களை அரசாங்கம் முன்வைத்தால், அதற்கு ஐக்கிய மக்கள் சக்தி முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

