ஜனாதிபதியின் யாழ். உரை சர்வதேச மனித உரிமைக்குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்துகின்றது – டாக்டர் ஏ.ஆர். கிஷாந்தன் குற்றச்சாட்டு

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI



ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் நிகழ்த்திய உரை இலங்கைக்கு எதிராக சர்வதேச ரீதியாக முன்வைக்கப்படும் மனித உரிமைக்குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக அருணலு மக்கள் முன்னணியின் தலைவர் டாக்டர் ஏ.ஆர். கிஷாந்தன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்திற்குச் செல்வது விகாரைகளை வழிபட அல்ல, மாறாகத் தங்களது மேலாதிக்கத்தைக் காட்டவே என்று ஜனாதிபதி குறிப்பிட்டிருப்பது முற்றிலும் தவறானதும் கண்டிக்கத்தக்கதுமான ஒரு கருத்தாகும் எனச் சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் இனப் பிரச்சினை மற்றும் மனித உரிமைகள் குறித்து சர்வதேச ரீதியில் ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலவி வரும் நிலையில், நாட்டின் தலைவரின் இத்தகைய பேச்சுக்கள் அந்த குற்றச்சாட்டுகளுக்கு மேலும் வலுச்சேர்க்கும் என அவர் எச்சரித்தார்.

இவ்வாறான கருத்துக்களை ஜனாதிபதியால் மாத்தறையில் கூற முடியாது எனத் தெரிவித்த அவர், தென்பகுதியில் தமிழ் மக்களின் வழிபாட்டுத் தலங்கள் எவ்வித தடையுமின்றி கட்டப்பட்டு வரும் சூழலில், இத்தகைய பிரிவினைவாதப் பேச்சுக்கள் நாட்டில் மீண்டும் இனவாதப் பிரச்சினைகளைத் தூண்டக்கூடும் எனத் தெரிவித்தார்.
இலங்கையின் கல்வி முறைமை குறித்து கருத்துத் தெரிவித்த டாக்டர் கிஷாந்தன், எமது நாட்டின் கல்வி உலகத்தரம் வாய்ந்தது என்றும், இன்று சர்வதேச அளவில் பல இலங்கையர்கள் உயரிய பதவிகளில் இருப்பதற்கு இந்த கல்வி முறையே சான்று என்றும் குறிப்பிட்டார். எனவே, உலக அங்கீகாரம் பெற்ற தற்போதைய கல்வி முறையில் மாற்றங்களைச் செய்ய வேண்டிய அவசியமில்லை என அவர் வலியுறுத்தினார்.

மேலும், பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுத்த ரணில் விக்ரமசிங்கவை சிறையில் அடைத்திருப்பது தவறான தீர்மானம் எனத் தெரிவித்த அவர், நாட்டின் தற்போதைய இடர்பாடுகளுக்கு இவ்வாறான அரசியல் பழிவாங்கல்களே காரணமாக இருக்கலாம் எனவும் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">