அரசுக்கு எதிராக ஆட்சியை அமைப்பதற்கு நிபந்தனையின்றி ஆதரவு வழங்க தயார்; ஐக்கிய மக்கள் சக்தி அறிவிப்பு
பணம் மற்றும் சிறப்புரிமைகளுடன் சுயேச்சை குழுக்கள் மீது அரசாங்கம் வலை வீசுவதாகவே எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. எவ்வாறிருப்பினும் அரசாங்கத்துக்கு எதிராக உள்ளூராட்சிமன்றங்களில் ஆட்சி அமைப்பதற்கு நிபந்தனைகளின்றி ஒத்துழைப்பு வழங்க தயாராகவுள் ளோம். ஏனைய கட்சிகளுடன் சுமூகமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து பலமான சபைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
எதிர்க்கட்சிகளின் வாக்குகள் இலட்சத்தில் அதிகரித்துள்ள நிலையில் அரசாங்கத்தின் வாக்குகள் மில்லியன்களில் குறைவடைந்துள்ளன. இதனை நியாயப்படுத்துவதற்கு அரசாங்கம் பாடுபட்டு வருகிறது.
வாக்களிப்பு வீதம் குறைவடைந்துள்ளதை ஒரு காரணமாகக் கூறுகின்றனர். அவ்வாறெனில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பொதுஜன பெரமுனவின் வாக்குகள் எவ்வாறு அதிகரித்தன?
அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக அரசாங்கம் ஒழுக்கத்திலிருந்தும் விலகி செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. அது மாத்திரமின்றி தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் கூட கைவிடப்பட்டிருக்கின்றன. மக்கள் வழங்கியுள்ள செய்தி தொடர்பில் அரசாங்கம் இதனை விட ஆழமாக சிந்திக்க வேண்டும்.
பணம் மற்றும் சிறப்புரிமைகளுடன் சுயேச்சை குழுக்கள் மீது அரசாங்கம் வலை வீசுவதாகவே எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. எவ்வாறிருப்பினும் அரசாங்கத்துக்கு எதிராக உள்ளூராட்சிமன்றங்களை நிறுவுவதற்கு எதிர்க்கட்சிகள் நிபந்தனைகளின்றி ஒத்துழைப்பு வழங்க தயாராகவுள்ளன. ஏனைய கட்சிகளுடன் சுமூகமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து பலமான சபைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
கொழும்பு மாநகரசபை தேசிய மக்கள் சக்தியால் நிறுவப்பட்டால் உறுப்பினர்கள் விலைக்கு வாங்கப்பட்டுள்ளனர் என்பது உறுதியாகும். தாய் கூறிய பொய்களால் அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.
சபைகளை நிறுவுவதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்துள்ளன. விரைவில் அவற்றை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும் என்று நம்புகின்றோம் என்றார்.