தனக்கு நடந்த அநீதிக்கு நியாயம் கிடைக்கவில்லையென்பதால் எனது மகள் உயிரை மாய்த்துக்கொண்டாள் – தாயார் கண்ணீர் மல்க தெரிவிப்பு

என் மகள் இன்று உயிரோடு இல்லை. இந்த உலகத்தில் அவளுக்கு ஒரு நியாயம் கிடைக்கவில்லை.

இந்த சமூகத்தையே வெறுத்து தான் அவள் இந்த முடிவுக்கு வந்தாள். தனக்கு நடந்த அநீதிக்கு நியாயம் கிடைக்கவில்லை என்பதால் தாய், தந்தையையே வெறுத்தாள் என கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் உயிரை மாய்த்துக்கொண்ட பாடசாலை மாணவியின் தாயார் மிகவும் மனவேதனையுடன் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் தனக்கு பாடசாலையில் ஏற்பட்ட பாலியல் துஷ்பிரயோக சம்பவத்தால் மன விரக்தி அடைந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி உயிரை மாய்த்துக் கொண்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த சம்பவம் தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை (04) இலங்கை ஆசிரியர் சங்கத்தில் ஊடக சந்திப்பு ஒன்று நடை பெற்றுள்ளது.

அதில் உயிரை மாய்த்த மாணிவியின் பெற்றோர், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் முகனேஷ்வரி டென்சில் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது கண்ணீர் மல்க கருத்துத் தெரிவித்த மாணவியின் தாய் மேலும் குறிப்பிடுகையில்,

என் மகள் இன்று உயிரோடு இல்லை. இந்த உலகத்தில் அவளுக்கு ஒரு நியாயம் கிடைக்கவில்லை. இந்த சமூகத்தையே வெறுத்து தான் அவள் இந்த முடிவுக்கு வந்தாள். தனக்கு நடந்த அநீதிக்கு நியாயம் கிடைக்கவில்லை என்பதால் தாய் தந்தையையே வெறுத்தாள்.

கனவுகளோடு இருந்த எனது மகளுக்கு படிக்க முடியவில்லை என வருத்தப்பட்டாள். என் மகளை வேறு பாடசாலைக்கு இடம்மாற்றிய போதும் வருத்தப்பட்டாள், தனக்கு இந்த நிலைமை ஏற்படக் காரணமானவர்களுக்கு தண்டனை கிடைக்கவில்லை என வருத்தப்பட்டாள்.

தனக்கு கொடுமை செய்தவரை விட, தன்னை சமூகம் வெறுக்கும் நிலைக்குள்ளானதால், பாடசாலைக்கு போக மாட்டேன் எனக் கூறினாள்.

எங்களால் முடிந்தவற்றை நாம் அவளுக்கு செய்தோம். அவளை அதிலிருந்து மீட்க கஷ்டப்பட்டோம். என் பிள்ளைக்கு உதவி செய்ய யாரும் முன்வரவில்லை. யாரும் பேசவும் இல்லை. அவளுக்கு நடந்த மரணம் போன்று இன்னுமொரு பிள்ளைக்கு ஏற்படக் கூடாது.

“அம்மா எனக்கு நடந்த சம்பவம் இன்னொரு பாடசாலை மாணவிக்கு நடக்கக் கூடாது “என ஆரம்பத்தில் இருந்தே கூறினாள்.

எத்தனையோ பேர் இது போன்ற சம்பவங்களை மூடி மறைத்து மௌனமாக இருப்பார்கள். இது போன்ற சம்பவங்களை வெளிக்கொணர வேண்டும். வெளிக்கொணராத படியால் தான் எனது பிள்ளை இறந்துவிட்டாள்.

தனியார் வகுப்பறையில் வைத்து அவளை எழும்பி நிற்க வைத்து எல்லோர் முன்பாகவும் அசிங்கப்படுத்திவிட்டார்கள். அதனால் தான் அவள் தவறான முடிவு எடுத்து உயிரை மாய்த்துக் கொண்டாள். இந்த சம்பவத்துக்கு ஒரு நியாயம் கிடைக்க வேண்டுமென மேலும் தெரிவித்தார்.