யூரோ 2024: அடுத்த சுற்றை நெருங்கும் பிரான்ஸ், நெதர்லாந்து
பிரான்சும் நெதர்லாந்தும் மோதிய யூரோ 2024 காற்பந்து ஆட்டம் 0-0 எனச் சமநிலையில் முடிந்ததால், ‘டி’ பிரிவிலிருந்து அவ்விரு அணிகளும் காலிறுதிக்கு முந்திய சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
முந்திய ஆட்டத்தில் மூக்கில் காயமுற்றதால் பிரெஞ்சு அணித்தலைவர் கிலியம் எம்பாப்பே வெள்ளிக்கிழமை (ஜூன் 21) நடந்த இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை.
முற்பாதி ஆட்டத்தில் இருதரப்பினரும் ஈடுகொடுக்காமல் விளையாடினர். இருப்பினும், இரு அணிகளின் கோல் முயற்சிகளும் ஈடேறவில்லை.
பிற்பாதியில் நெதர்லாந்து அணியின் ஆட்டம் எதிரணிக்கு அச்சுறுத்தலாக விளங்கவில்லை. அதே நேரத்தில், பிரான்ஸ் அணியும் தனக்குக் கிடைத்த சில கோல் வாய்ப்புகளை வீணடித்தது.
நெதர்லாந்தின் ஸாவி சைமன்ஸ் பந்தை வலைக்குள் தள்ளியதால் அவ்வணியினர் கொண்டாட்டத்தில் இறங்கினர். ஆனால், டென்சல் டம்ஃபிரீஸ் ‘ஆஃப்சைடு’ நிலையில் இருந்ததால் அந்த கோல் செல்லாததாக அறிவிக்கப்பட்டது.
“நாங்கள் அடித்தது கோல்தான். பின்னாலிருந்து என்னால் பார்க்க முடிந்தது. பிரான்சுக்குச் சில கோல் வாய்ப்புகள் கிட்டின. எங்களுக்கும் ஓரிரு வாய்ப்புகள் கிடைத்தன. நம்பிக்கையுடன் போராடினோம். ஒரு புள்ளி கிடைத்துள்ளது. அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது எங்கள் கைகளில்தான் உள்ளது,” என்றார் நெதர்லாந்து அணித்தலைவர் வெர்ஜில் வேன் டைக்.
இதனிடையே, ஆஸ்திரியாவிடம் 3-1 என்ற கோல் கணக்கில் தோற்றுப் போனதால் போலந்து ‘டி’ பிரிவிலிருந்து முதல் அணியாக வெளியேறியது.
அடுத்ததாக, சிங்கப்பூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடக்கவுள்ள ஆட்டங்களில் நெதர்லாந்து, ஆஸ்திரியாவையும் பிரான்ஸ், போலந்தையும் எதிர்த்தாடவுள்ளன.