நெதர்லாந்தை வீழ்த்திய வங்கதேசம் 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி
நடப்பாண்டில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இன்றைய 27-வது போட்டியாக வங்கதேச அணியும், நெதர்லாந்து அணியும் கிங்ஸ்டவுனில் உள்ள அர்னோஸ் வேல் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் நாணய சுழற்சயில் வென்ற நெதர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது.
அதன்படி துடுப்பெடுத்தாட களமிறங்கிய வங்கதேச அணி முதலில் கொஞ்சம் தடுமாறினாலும் தன்சித் ஹசன் மற்றும் ஷாகிப் அல் ஹசனின் அற்புதமான கூட்டணியில் வங்கதேச அணி நல்ல ஒரு ஸ்கோரை நோக்கியே நகர்ந்தது. அதை தொடர்ந்து விளையாடிய இருவரும், ஷாகிப் 64 ஓட்டங்களும் , தன்சித் ஹசன் 35 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினார்கள்.
இதனால், அடுத்து களமிறங்கிய வீரர்கள் பெரிதளவு ஓட்டங்கள் அடிக்காததால் வங்கதேச அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களை எடுத்தது. நெதர்லாந்து அணியில் அதிகபட்சமாக வான் மீகெரென் மற்றும் ஆர்யன் தத் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர்.
அதனை தொடர்ந்து 160 ஓட்டங்களை எடுப்பதற்கு நெதர்லாந்து அணி களமிறங்கியது. தொடக்கம் முதலே நிதானத்துடனும், பொறுமையாகவும் தேவைப்பட்ட நேரத்தில் பவுண்டரிகள் என போட்டிக்கு தேவையானதை சரியாகவே செய்து வந்தனர். இருப்பினும் நன்றாக விளையாடும் வீரர்கள் நிலைத்து நிற்காமல் விக்கெட்டையும் இழந்து வந்தனர்.
இதன் காரணமாக கைவசம் விக்கெட்டுகள் இல்லாத காரணத்தால் 15 ஓவர்களுக்கு மேல் பவுண்டரியில் ஓட்டங்களை எடுக்க முடியாமல் நெதர்லாந்து அணி திணறியது, மேலும் வங்கதேச அணியின் பந்து வீச்சும் மிகவும் சிறப்பாகவே அமைந்தது. இதனால் 20 ஓவர்களில் நெதர்லாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 134 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
வங்கதேச அணியில் ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். மேலும், இதன் மூலம் வங்கதேச அணி 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அடுத்த சுற்றான சூப்பர் 8 சுற்றுக்கு செல்வதற்கும் புள்ளிப்பட்டியலில் பலமான பாதையையும் அமைத்துள்ளது.