ஐசிசி ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கு இலங்கை மத்தியஸ்தர் .
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கு ஐசிசியினால் நியமிக்கப்பட்டுள்ள மத்தியஸ்தர்கள் குழாத்தில் இலங்கையின் ரஞ்சன் மடுகல்லே, குமார் தர்மசேன ஆகியோர் அடங்குகின்றனர்.
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி ஐக்கிய அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் ஜூன் மாதம் நடைபெறவுள்ளது.
ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் மத்தியஸ்தம் வகிக்க 20 கள மத்தியஸ்தர்களும் 6 போட்டி தீர்ப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வருடாந்த ஐசிசி விருதுகளில் 2023க்கான வருடத்தின் அதிசிறந்த மத்தியஸ்தருக்கான டேவிட் ஷெப்பர்ட் விருதை வென்ற ரிச்சர்ட் இலிங்வேத், இலங்கையின் குமார் தர்மசேன, நியூஸிலாந்தின் கிறிஸ் கஃபானி, அவுஸ்திரேலியாவின் போல் ரைஃபல் ஆகியோரும் மத்தியஸ்தர்கள் குழாத்தில் இடம்பெறுகின்றனர்.
இவர்கள் நால்வரும் அவுஸ்திரேலியாவில் 2022இல் நடைபெற்ற ஐசிசி ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் கள மற்றும் 3ஆவது, தொலைக்காட்சி மத்தியஸ்தர்களாக கடமையாற்றி இருந்தனர்.
இதேவேளை ஐசிசி ரி20 உலகக் கிண்ண போட்டிக்கு நியமிக்கப்பட்டுள்ள 6 தீர்ப்பாளர்களில் இலங்கையின் ரஞ்சன் மடுகல்லேயும் ஒருவராவார்.
அவர், இருபாலாருக்குமான சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 780 போட்டிகளில் தீர்ப்பாளராக கடமையாற்றியுள்ளார்.
2022 ரி20 உலகக் கிண்ணப் போட்டியிலும் தீர்ப்பாளராக ரஞ்சன் மடுகல்லே கடமையாற்றி இருந்தார்.
ஐசிசி ரி20 உலகக் கிண்ணத்தில் மத்தியஸ்தர்களாக கிறிஸ் ப்றவுண், குமார் தர்மசேன, கிறிஸ் கஃபானி, மைக்கல் கோ, ஏட்றியன் ஹோல்ட்ஸ்டிக், ரிச்சர்ட் இலிங்வேர்த், அலாஹுடின் பலேக்கர். ரிச்சர்ட் கெட்ல்பறோ, ஜெயராமன் மதனகோபால், நிட்டின் மேனன், சாம் நோகாஜ்ஸ்கி, அஷான் ராஸா, ரஷித் ராஸா, போல் ரைஃபல், லெங்டன் ரூசியர், ஷஹித் சய்க்காத், ரொட்னி டக்கர், அலெக்ஸ் வாஃப், ஜோயல் வில்சன், அசிப் யாக்கூப் ஆகியோர் கடமையாற்றவுள்ளனர்.
தீர்ப்பாளர்களாக டேவிட் பூன், ஜெஃப் குறோ, ரஞ்சன் மடுகல்லே, அண்டி பைக்ரொவ்ட், ரிச்சி ரிச்சர்ட்சன், ஜவகல் ஸ்ரீநாத் ஆகியோர் கடமையாற்றவுள்ளனர்.