டெல்லியை வீழ்த்தி கொல்கத்தா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.

இன்றைய போட்டியில் கொல்கத்தா அணியும், டெல்லி அணியும் மோதியது. இந்த போட்டியானது ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. நாணய சுழற்சில் வெற்றி பெற்ற டெல்லி துடுப்பெடுத்தாட தீர்மானித்து . அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவரில் 9 விக்கெட்டைகளை இழந்து 153 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தனர்.

இதில் அதிகபட்சமாக ரிஷப் பந்த் மட்டும் 27 ஓட்டங்கள் எடுத்தார். கொல்கத்தா அணியில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டையும், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா தலா 2 விக்கெட்டையும், சுனில் நரைன் 1 விக்கெட்டையும் பறித்தனர். இதைத்தொடர்ந்து 154 ஓட்டங்கள் என்ற எளிய இலக்குடன் கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சுனில் நரேன், பிலிப் சால்ட் இருவரும் களமிறங்கினர்.

ஆட்டம் தொடங்கியது முதல் பிலிப் சால்ட் அதிரடியாக விளையாடி வந்தார். அதன்படி சிறப்பாக விளையாடி 26 பந்தில் பிலிப் சால்ட் அரை சதம் விளாசினார். அதே நேரத்தில் மறுபுறம் நிதானமாக விளையாடி வந்தார். இவர்களின் கூட்டணியை பிரிக்க டெல்லி அணி திணறியது. பவர் பிளே ஓவரில் கொல்கத்தா விக்கெட்டை இழக்காமல் 79 ஓட்டங்கள் குவித்தனர்.

பவர் பிளே முடிந்து ஏழாவது ஓவரை அக்சர் படேல் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்திலே சுனில் நரேன் விக்கெட்டை இழந்து 15 ஓட்டங்களில் வெளியேறினார். இதைத்தொடர்ந்து ரிங் சிங் களமிறங்க மீண்டும் 9-வது ஓவரை அக்சர் படேல் வீச அந்த ஓவரின் 2-வது பந்தில் மற்றொரு தொடக்க வீரரான பிலிப் சால்ட் 68 ஓட்டங்கள் எடுத்து போல்டாகி வெளியேறினார். 33 பந்தில் 7 பவுண்டரி, 5 சிக்ஸர் விளாசினார்.

3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ரிங் சிங் நிலைத்து நிற்காமல் 10-வது ஓவரில் லிசாட் வில்லியம்ஸிடம் பிடி கொடுத்து வெளியேற அடுத்து கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் வெங்கடேஸ் ஐயர் இருவரும் நிதானமாக விளையாடி ஓட்டங்களை சேர்த்து வந்தனர். ஐபிஎல் தொடரில் இதுவரை 2994 ஓட்டங்கள் எடுத்து இருந்த ஷ்ரேயாஸ் ஐயர் இன்றைய போட்டியில் 6 ஓட்டங்கள் எடுத்தபோது ஐபிஎல் தொடரில் தனது 3000 ஓட்டங்களை கடந்தார்.

இறுதியாக கொல்கத்தா அணி 16.3 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 157 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். களத்தில் கடைசிவரை ஆட்டமிழக்காமல் ஷ்ரேயாஸ் ஐயர் 33 ஓட்டங்களுடனும் , வெங்கடேஸ் ஐயர் 26 ஓட்டங்களுடனும் இருந்தனர். டெல்லி அணியில் அக்சர் படேல் 2 விக்கெட்டையும், லிசாட் வில்லியம்ஸ் 1 விக்கெட்டையும் பறித்தனர்.

கொல்கத்தா அணி 9 போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் 6 போட்டிகளில் வெற்றியும், 3 போட்டிகளில் தோல்வியும் தழுவியுள்ளது. அதே நேரத்தில் டெல்லி அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 5 போட்டிகளில் வெற்றியும், 6 போட்டிகளில் தோல்வியும் தழுவியுள்ளது.