IPL2024-பெங்களூரு அணி 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி.
இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியும், பெங்களூரு அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் நாணய சுழற்சயில் வென்ற பெங்களூர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 206 ஓட்டங்கள் எடுத்தனர்.
இதில் அதிகபட்சமாக தொடக்க வீரர் விராட் கோலி 51 ஓட்டங்களும் , ரஜத் படிதார் 50 ஓட்டங்களும் , கேமரூன் கிரீன் 37* ஓட்டங்களும் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். ஹைதராபாத் அணியில் ஜெய்தேவ் உனத்கட் 3 விக்கெட்டையும், நடராஜன் 2 விக்கெட்டையும் பறித்தனர். ஹைதராபாத்தில் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா இருவரும் களமிறங்கினர்.
முதல் ஓவரின் கடைசி பந்தில் டிராவிஸ் ஹெட் 1 ஓட்டம் எடுத்து கரண் சர்மாவிடம் பிடி கொடுத்து வெளியேறினார். அடுத்து ஐடன் மார்க்ரம் களமிறங்க அதே நேரத்தில் மறுபுறம் இருந்த தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா அதிரடியாக விளையாடி 13 பந்தில் 31 ஓட்டங்கள் குவித்து 4 -வது ஓவரில் விக்கெட்டை இழந்தார்.
அடுத்த ஓவரில் ஐடன் மார்க்ரம் 7 ஓட்டங்களையும் , அடுத்து களமிறங்கிய நிதிஷ் ரெட்டி 13 ஓட்டங்களிலும் , அதிரடி வீரர் ஹென்ரிச் கிளாசென் 7 ஓட்டங்களிலும் , அப்துல் சமத் 10 ஓட்டங்களிலும் விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினர். இதனால் ஹைதராபாத் அணி 85 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டை பறிகொடுத்தனர்.
அடுத்து வந்த கேப்டன் பாட் கம்மின்ஸ் 11 -வது ஓவரில் தொடந்து 2 சிக்ஸர் விளாசினார். அதிரடியாக விளையாடிய கம்மின்ஸ் 15 பந்தில் 31 ஓட்டங்கள் எடுத்து கேமரூன் கிரீனிடம் பிடி கொடுத்து நடையை கட்டினார். இருப்பினும் மத்தியில் இறங்கிய ஷாபாஸ் அகமது நிதானமாக விளையாடி 40* ஓட்டங்கள் எடுத்து கடைசிவரை களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியாக ஹைதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 171 ஓட்டங்கள் எடுத்தனர். இதனால் பெங்களூரு அணி 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக ஸ்வப்னில் சிங், கரண் சர்மா, கேமரூன் கிரீன் தலா 2 விக்கெட்டை பறித்தனர். இதுவரை பெங்களூரு அணி 9 போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் 2 போட்டியில் வெற்றியும், 7 போட்டியில் தோல்வியும் தழுவி உள்ளது.
அதே நேரத்தில் ஹைதராபாத் அணி 8 போட்டிகளில் விளையாடி 5 போட்டியில் வெற்றியும், 3 போட்டிகளில் தோல்வியும் தழுவி உள்ளது. தொடர்ந்து 6 போட்டிகளில் தோல்வி தழுவி வந்த பெங்களூரு அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.