ஐபிஎல்2024-ராஜஸ்தான் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.

 

ராஜஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 224 ஓட்டங்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்றைய போட்டியில் ராஜஸ்தான் , கொல்கத்தா அணி மோதியது. இந்த போட்டி ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. நாணய சுழற்சில் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசி தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 223 ஓட்டங்கள் எடுத்தனர்.

ராஜஸ்தான் அணியில் குல்தீப் சென், அவேஷ் கான் தலா 2 விக்கெட்டையும், சாஹல், டிரென்ட் போல்ட் தலா 1 விக்கெட்டை பறித்தனர். கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக சுனில் நரேன் 109 ஓட்டங்களும் , ரகுவன்ஷி 30 ஓட்டங்களும் எடுத்தனர். 224 ஓட்டங்கள் என்ற பெரிய இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் இருவரும் களமிறங்கினர். இலக்கு பெரிது என்பதால் ஆட்டம்தொடக்கமே அடித்து விளையாட ராஜஸ்தான் அணி முடிவு செய்தனர். அதன்படி தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 9 பந்தில் 19 ஓட்டங்கள் எடுத்து இருந்தபோது வெங்கடேஸ் ஐயரிடம் பிடி கொடுத்து விக்கெட்டை இழந்தார்.

அடுத்து வந்த சஞ்சு சாம்சன் வெறும் 12 ஓட்டங்கள் எடுத்து 5-வது ஓவரில் விக்கெட்டை இழந்தார். அடுத்து களம் கண்ட ரியான் பராக் அதிரடியாக விளையாடி ஓட்டங்கள் சேர்த்தார். அது நீண்ட நேரம் நிலைக்கவில்லை, 34 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ரஸ்ஸலிடம் பிடி கொடுத்து நடையை கட்டினார்.

அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து துருவ் ஜூரல் 2, அஷ்வின் 8 ஓட்டங்களிலும் , ஹெட்மியர் கோல்டன் டக் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தனர். இருப்பினும் மறுமுனையில் விளையாடிய தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் நிதானமாக விளையாடி 36 பந்தில் அரைசதம் அடித்தார்.

17-வது ஓவரை சுனில் நரேன் வீசினார். அந்த ஓவரில் ரோவ்மேன் பவல் முதல் 3 பந்தில் 2 சிக்ஸர் , 1 பவுண்டரி விளாசினார். அடுத்த பந்திலே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இருப்பினும் களத்தில் அதிரடியாக விளையாடி வந்த ஜோஸ் பட்லர் 55 பந்தில் சதம் விளாசி 107* ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் கடைசிவரை களத்தில் இருந்து அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றார். அதில் 6 சிக்ஸர், 9 பவுண்டரி அடங்கும்.

இறுதியாக ராஜஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 224 ஓட்டங்ள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுவரை ராஜஸ்தான் 7 போட்டியில் விளையாடி 6 போட்டிகள் வெற்றியும், 1 போட்டியில் தோல்வியும் தழுவியுள்ளது. அதே நேரத்தில் கொல்கத்தா அணி இதுவரை 6 போட்டிகள் விளையாடி உள்ளது. இதில் 4 போட்டியில் வெற்றியும், 2 போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. புள்ளி பட்டியலில் ராஜஸ்தான் அணி தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்து உள்ளது