இந்தியாவை 28 ஓட்டங்களால் வீழ்த்தி வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி .

ஹைதராபாத் உப்பல் ரஜீவ் காந்தி சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று முடிவடைந்த இந்திய – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து 28 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

ஒலி போப் மிக நிதானத்துடன் குவித்த 198 ஓட்டங்கள், ஜோ ரூட் கைப்பற்றிய 4 விக்கெட்கள், அறிமுக சுழல்பந்துவீச்சாளர் டொம் ஹாட்லி பதிவு செய்த 7 விக்கெட் குவியல் என்பன இங்கிலாந்தின் வெற்றியில் பிரதான பங்காற்றின.

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிகள் நிலையில் முதலிடத்தில் உள்ள நடப்பு உலக டெஸ்ட் சம்பியன் அவுஸ்திரேலியாவும் இரண்டாம் இடத்திலுள்ள இந்தியாவும் ஒரே நாளில் சில மணித்தியாலங்கள் இடைவெளியில் இரு வேறு டெஸ்ட்களில் தோல்வி அடைந்தன.

அந்த இரண்டு அணிகளும் தத்தமது சொந்த நாட்டில் தோல்வி அடைந்தமை குறிப்பிடத்தக்கது.

முதல் இன்னிங்ஸ் நிறைவில் இந்தியாவை விட 190 ஓட்டங்களால் பின்னிலையில் இருந்ததால் இங்கிலாந்து தொல்வி அடையலாம் என கருதப்பட்டது.

ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் ஒலி போப் 6 மணித்தியாலங்களுக்கு மேல் துடுப்பெடுத்தாடி 278 பந்துகளை எதிர்கொண்டு 21 பவுண்டறிகளுடன் 196 ஓட்டங்களைக் குவித்தமை போட்டியில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது.

அவரது துடுப்பாட்டத்தின் உதவியுடன் இந்தியாவுக்கு 231 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த இங்கிலாந்து, 2ஆவது இன்னிங்ஸில் டொம் ஹாட்லியின் துல்லியமான பந்துவீச்சைக் கொண்டு இந்தியாவை 202 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழக்கச் செய்து அற்புதமான வெற்றியை ஈட்டியது.