309 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி


உலகக்கோப்பை தொடரின் 24 வது லீக் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதியது. நாணய சுழற்சயில் வென்ற ஆஸ்திரேலியா துடுப்பெடுத்தாட தீர்மானித்தது . இதைதொடர்ந்து, ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர் களமிறங்கினார்கள். இதில் மிட்செல் பெரிதாக ஓட்டம் எதுவும் எடுக்காமல் 9 ஓட்டங்களில் வெளியேறினார். பின்னர் ஸ்மித் களமிறக்க சிறப்பாக விளையாடி வந்த டேவிட் வார்னருடன் ஸ்டீவன் ஸ்மித் இணைந்து விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார். இருவரும் இணைந்து அணிக்கு நல்லத்தொடக்கத்தை அமைத்துக் கொடுத்னர்.

சிறப்பாக விளையாடி வந்த வார்னர், ஸ்டீவன் ஸ்மித் இருவரும் அரைசதம் கடந்தார்கள். தொடர்ந்து நிதானமாக விளையாடி வந்த ஸ்டீவன் ஸ்மித் ஆர்யன் தத் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு களமிறங்கிய மார்னஸ் லாபுசாக்னேஅதிரடியாக விளையாடி அரைசதம் எட்டி 62 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க மறுபுறம் விளையாடி வந்த டேவிட் வார்னர் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். சதம் விளாசிய சிறிது நேரத்திலே டேவிட் வார்னர் தனது விக்கெட்டை இழந்தார்.

அடுத்து களமிறங்கிய மேக்ஸ்வெல் அதிரடியாக சிக்ஸர்கள், பவுண்டரிகளை பறக்கவிட்டு 40 பந்துகளில் அதிவேக சதம் அடித்து உலக சாதனை படைத்தார். உலகக் கோப்பை வரலாற்றில் இதுவே அதிவேக சதம். இருப்பினும் மேக்ஸ்வெல் சதம் அடித்த அடுத்த 4 பந்தில் களத்தை விட்டு 106 ஓட்டங்களுடன் வெளியேறினார். இதில் 9 பவுண்டரி, 8 சிக்ஸர் அடங்கும். இறுதியில் ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 399 ஓட்டங்களை குவித்தது. நெதர்லாந்து அணியில் லோகன் வான் பீக் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளையும், பாஸ் டி லீடே 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

400 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கியது. ஆட்டம் தொடங்கியத்திலே இருந்து நெதர்லாந்து திணறியது. தொடங்க வீரர் மேக்ஸ் ஓ டவுட் 6 ஓட்டங்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுக்க அடுத்து இறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ஓட்டங்களுடன் பெவிலியன் திரும்பினர். நெதர்லாந்து அணியில் 3 வீரர்கள் ஓட்டங்கள் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினர். இறுதியாக நெதர்லாந்து அணி 21 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 90 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 309 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. நெதர்லாந்து அணியில் அதிகபட்சமாக விக்ரமத்சிங் 25 ஓட்டங்கள் எடுத்து குறிப்பிடத்தக்கது.