149 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்கா அபார வெற்றி.
பங்காளதேஷ் அணி 46.4 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 233 ஓட்டங்கள் எடுத்து 149 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற 23-வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் நாணய சுழற்சயில் வென்ற தென்னாப்பிரிக்கா துடுப்பெடுத்தாட தீர்மானித்தது . இதன்படி, தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக் மற்றும் ரீசா ஹென்ட்ரிக்ஸ் இருவரும் இருவரும் களமிறங்கினர்.
ஆட்டம் தொடங்கியது முதலே குயின்டன் டி காக் சிறப்பாக விளையாட தொடங்கினார். ஆனால் மறுபுறம் விளையாடிய ரீசா ஹென்ட்ரிக்ஸ் 19 பந்துகளில் 12 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ராஸ்ஸி வான் டெர் டுசென் 1 ஓட்டம் மட்டுமே எடுத்து வெளியேறினார். இதன்பிறகு ஐடன் மார்க்ராம் மற்றும் குயின்டன் டி காக் இருவரும் ஜோடி சேர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். சிறப்பாக விளையாடி வந்த கேப்டன் ஐடன் மார்க்ராம் அரைச்சதம் விளாசி 60 ஓட்டங்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
அடுத்து களமிறங்கிய ஹென்ரிச் கிளாசென் அதிரடியாக விளையாடி வந்த குயின்டன் டி காக் உடன் சேர்ந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர்களின் விக்கெட்டை பறிக்க முடியாமல் பங்களாதேஷ் அணி பந்து வீச்சாளர்கள் திணறி வந்தனர். இருப்பினும் குயின்டன் அபாரமாக விளையாடி சதம் அடித்து விளாசினார். இதையடுத்து, குயின்டன் பவுண்டரிகளை பறக்கவிட இவருடன் இணைந்த ஹென்ரிச் கிளாசென் அரைசதத்தை கடந்தார்.
இருவரும் சிறப்பாக விளையாடி வர ஹசன் மஹ்மூத் வீசிய பந்தில் குயின்டன் 140 பந்திற்கு 15 பவுண்டரி, 7 சிக்ஸர் என மொத்தம் 174 ஓட்டங்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். பின்னர் கிளாசென் தனது சதத்தைத் தவறவிட்டு 90 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். கடைசியில் இறங்கிய மில்லர் வந்த வேகத்தில் 15 பந்தில் 4 சிக்ஸர் ,1 பவுண்டரி என 34* ஓட்டங்கள் எடுத்து இறுதிவரை களத்தில் நின்றார். இறுதியாக தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 382 ஓட்டங்கள் குவித்தது. பங்களாதேஷ் அணியில் ஹசன் மஹ்மூத் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பங்களாதேஷ் அணி 383 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அணியின் தொடக்க வீரர்களாக தன்சித் ஹசன், லிட்டன் தாஸ் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொங்கிய சிறிது நேரத்திலே தன்சித் ஹசன் 12 ஓட்டங்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர் அடுத்து களமிறங்கிய கேப்டன் ஷகிப் அல் ஹசன் 1 ஓட்டத்துடனும் , முஷ்பிகுர் ரஹீம் 8 ஓட்டங்களுடனும் , நஜ்முல் ஹொசைன் ஓட்டங்களும் எடுக்காமல் டக் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். இதை தொடர்ந்து நிதானமாக விளையாடிய தொடக்க வீரர் லிட்டன் தாஸ் ரபாடா ஓவரில் 22 ஓட்டங்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.
இதனால் பங்களாதேஷ் அணி 58 ஓட்டங்கள் எடுத்த நிலையில் 5 விக்கெட்டை இழந்தனர். 6-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய மஹ்முதுல்லாஹ் மட்டும் நிதானமாகவும், சிறப்பாகவும் விளையாடி 104 பந்தில் சதம் விளாசி 111 ஓட்டங்கள் குவித்தார். இதில் 11 பவுண்டரி, 4 சிக்ஸர் இறுதியில் பங்காளதேஷ் அணி 46.4 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 233 ஓட்டங்கள் எடுத்து 149 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. தென்னாபிரிக்கா அணியில் ஜெரால்ட் கோட்ஸி 3 விக்கெட்டையும், மார்கோ ஜான்சன், ரபாடா, லிசாட் வில்லியம்ஸ் தலா 2 விக்கெட்டையும், கேசவ் மகாராஜ் 1 விக்கெட்டை பறித்தனர்.