தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்து முதல் வெற்றியை பதிவு செய்த நெதர்லாந்து.!

தென்னாபிரிக்க அணி 42.5 ஓவரில் அனைத்து விக்கெட் இழந்து 207 ஓட்டங்கள் எடுத்து 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இன்று நடப்பு உலகக்கோப்பை தொடரின் 15-வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியும், நெதர்லாந்து அணியும் தர்மசாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் நாணய சுழற்சயில் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சைத் தேர்வு செய்தனர். இதைத்தொடர்ந்து, நெதர்லாந்து அணியின் தொடக்க வீரர்களாக விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓ’டவுட் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலே விக்ரம்ஜித் சிங் வெறும் 2 ஓட்டங்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்த ஓவரிலே மறுபுறம் விளையாடிய தொடக்க வீரர் மேக்ஸ் ஓ’டவுட் 18 ஓட்டங்களில் நடையை காட்டினார்.

அடுத்து இறங்கிய அக்கர்மேன் 13, பாஸ் டி லீடே 2 ஓட்டங்கள் எடுத்து வெளியேற பிறகு மத்தியில் இறங்கிய ஸ்காட் எட்வர்ட்ஸ் மட்டும் சிறப்பாக விளையாடி சரிவில் இருந்த அணியை மீட்டு கொண்டுவந்தார். ஸ்காட் சிறப்பாக விளையாடி 69 பந்தில் 78 ஓட்டங்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இதில் 10 பவுண்டரி, 1 சிக்ஸர் அடங்கும். கடைசியில் களமிறங்கிய ஆர்யன் தத், வான் டெர் மெர்வே இருவரும் அதிரடி காட்டினர். வந்த வேகத்தில் ஆர்யன் தத் 3 சிக்ஸர் விளாசி மொத்தம் 23 ஓட்டங்கள் சேர்த்து கடைசிவரை களத்தில் நின்றார். மறுபுறம் விளையாடிய வான் டெர் மெர்வே 29 அடிக்க இறுதியாக நெதர்லாந்து அணி 43 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 245 ஓட்டங்கள் எடுத்தனர்.

மழை காரணமாக போட்டி 43 ஓவராக குறைக்கப்பட்டது. தென்னாபிரிக்கா அணியில் ரபாடா, மார்கோ ஜான்சன், லுங்கி நிகிடி தலா 2 விக்கெட்டை பறித்தனர். 246 ஓட்டங்கள் என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணியில் தொடக்கவீரர்களாக குயின்டன் டி காக், தேம்பா பாவுமா இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கியது முதல் இருவருமே நிதானமாக விளையாடி வந்த நிலையில் குவிண்டன் டிகாக் 20 ஓட்டங்களில் விக்கெட்டை இழந்தார். அடுத்து களம் இறங்கிய ஐடன் மார்க்ராம் 1, ராஸ்ஸி வான் டெர் டுசென் 4 ஓட்டங்களில் விக்கெட்டை பறிகொடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.

பிறகு மத்தியில் களம் இறங்க டேவிட் மில்லர் நிதானமான விளையாடி அணியின் எண்ணிக்கையை சற்று உயர்த்தினார். அரைசதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் நான்கு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 43 ஓட்டங்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். பிறகு இறங்கிய அனைத்து வீரர்களும் நிலைத்து நிற்காமல் வந்த வேகத்தில் நடையை கட்டினர். கடைசியில் களமிறங்கிய கேசவ் மகாராஜ் பொறுப்புடன் விளையாடி 40 ஓட்டங்கள் குவித்தார். இறுதியில் தென்னாபிரிக்க அணி 42.5 ஓவரில் அனைத்து விக்கெட் இழந்து 207 ஓட்டங்கள் எடுத்து 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

நெதர்லாந்து அணியில் லோகன் வான் பீக் 3 விக்கெட்டையும், பாஸ் டி லீடே, பால் வான் மீகெரென், ரோலோஃப் வான் டெர் மெர்வே, தலா 2 விக்கெட்டையும் பறித்தனர். தென்னாபிரிக்கா அணி விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு போட்டியில் வெற்றியும் ஒரு போட்டி தோல்வியும் தழுவியுள்ளது. நெதர்லாந்து அணி விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு போட்டியில் தோல்வியும் ஒரு போட்டியில் வெற்றியும் பெற்றுள்ளது.