ஆசிய கோப்பை: வங்காளதேசத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை வெற்றி.

ஆசிய கோப்பை போட்டி பல்லகெலேயில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது 2-வது லீக்கில் நடப்பு சாம்பியன் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி, ஷகிப் அல்-ஹசன் தலைமையிலான வங்காளதேசத்துடன் மோதியது.

நாணய சுழற்சயில் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் ஷகிப் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார் . வங்காளதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர் முகம்மது நயிம் 16 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தன்சித் ஹசன் ஓட்டம் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய நஜ்முல் சாண்டோ பொறுப்புடன் விளையாடி ஓட்டங்களை திரட்டினார். ஆனால், மறுமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தது.

இலங்கை அணியின் சிறப்பான பந்துவீச்சால் வங்காளதேச அணியினர் ஓட்டங்களை குவிக்க தவறினர். கேப்டன் ஷகிப் 5 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அந்த அணியில் நஜ்முல் சாண்டோ மட்டும் தன் பங்குக்கு 89 ஓட்டங்கள் எடுத்தார்.

இறுதியில் வங்காளதேச அணி 42.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ஓட்டங்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து 165 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி விளையாடியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பதுன் நிஷாங்கா 14 ஓட்டங்களும் , கருணரத்னே 1 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்துவந்த குஷல் மெண்டிஸ் 5 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார் . இதனை தொடர்ந்து அணியை சமரவிக்ரம- அசலங்கா ஜோடி சரிவில் இருந்து மீட்டது. இவர்களில் சமரவிக்ரம அரைசதம் அடித்து 54 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பின்னர் கேப்டன் ஷனகா- அசலங்கா இணைந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றனர். அசலங்கா 62 ஓட்டங்களுடனும் , ஷனகா 14 ஓட்டங்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் இலங்கை அணி 39 ஓவர்களில் இலக்கை கடந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.