மனித மூளையை கணனியோடு இணைத்து இயக்கும் பரிசோதனை!

Kumarathasan Karthigesu-பாரிஸ் .

இந்த ஆண்டில் முயற்சி பாரிஸ் கண்காட்சியில் எலொன் மஸ்க் அறிவிப்பு.

அறிவியலின் மற்றொரு உச்ச அடைவாக மனித மூளையைக் கணனியோடு நேரடியாக இணைத்து இயங்கச் செய்விக்கின்ற “நியூராலிங்” (Neuralink) பரீட்சார்த்தப் பரிசோதனை இந்த ஆண்டில் முன்னெடுக்கப்படும்.

பாரிஸ் “வீவா ரெக்”(VivaTech) வர்த்தகக் கண்காட்சியில் கலந்து கொண்ட அமெரிக்கக் கோடீஸ்வரர் எலொன் மஸ்க் (Elon Musk) இத்தகவலை அங்கு அறிவித்தார்.

ஐரோப்பாவில் மிகப்பெரிய அறிவியல் கண்டுபிடிப்புகளைச் செய்கின்ற பெரு நிறுவனங்களது புதிய பொருள்களை அறிமுகப்படுத்துகின்ற இந்த மாபெரும் வர்த்தகக் கண்காட்சி கடந்த சில தினங்களாக பாரிஸ் போர்த் து வேர்சாய் கண்காட்சி மண்டபத்தில் (Porte de Versailles exhibition centre) நடைபெற்றது. உலகெங்கும் இருந்து தொழில்நுட்பப் பெரு நிறுவனங்களின் உரிமையாளர்கள், அறிவியலாளர்கள் உட்பட நூற்றுக்கணக்கான பிரமுகர்கள் கண்காட்சிக்காகப் பாரிஸுக்கு வருகை தந்திருந்தனர். அதிபர் மக்ரோன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கண்காட்சியைத் தொடக்கி வைத்தார்.

இந்த முறை கண்காட்சியில் செயற்கை நுண்ணறிவும் (artificial intelligence) அதுசார்ந்த தொழில்நுட்ப சாதனங்களுமே முதலிடம் பெற்றிருந்தன. கண்காட்சிக்குச் சிறப்பு விருந்தினராக வந்திருந்த எலொன் மஸ்க், கண்காட்சியை ஒட்டி நடத்தப்பட்ட ஒரு மாநாட்டில் எதிர்கால அறிவியல் சாதனைகள் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

கோடீஸ்வரர் எலென் மஸ்க் 2016 நியூரோலிங் நிறுவனத்தை வேறு சிலருடன் இணைந்து நிறுவினார். அதன் நோக்கம் மனித மூளையின் தொழிற்பாடுகளோடு கணனியை இணைப்பது ஆகும். மனித மூளையின் சிந்தனை மூலம் நேரடியாகக் கணனிகளுடன் தொடர்பு கொள்வதற்காக மூளையின் உள்ளே பொருத்தப்படும் சாதனங்களை(devices to be implanted in the brain) நியூரோலிங் வடிவமைக்கிறது. நீண்ட கால மூளை நரம்பு வியாதிகள், பக்கவாதம், பார்கின்சன் நோய், முள்ளந்தண்டு வடப்பாதிப்புப் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதே அதன் முதல் நோக்கம் என்று தெரிவிக்கப்படுகிறது.

நியூராலிங்கின் தொழில்நுட்பமானது ஒரு ரோபோ மூலம் செய்யப்படும் அறுவை சிகிச்சையின் மூலம் மூளையின் உள்ளே கருவிகளை(brain chip) உள்வைத்துப்பொருத்தி( implant) மூளையின் பகுதிகளைத் தூண்டுவதாகும். உள்வைக்கப்படுகின்ற பொருள் வெளியே கண்ணுக்குத் தெரியாத சிறிய நாணயத்தின் அளவைக் கொண்டிருக்கும். மற்றும் ஒரு சிறிய – வெளியே இருந்து மின்னேற்றக்கூடிய பற்றரி (remote rechargeable battery) மூலம் இயக்கப்படும். உள்வைப்புக் கருவி மூளை நரம்புச் சமிக்ஞைகளைப் பதிவுசெய்து மூளையின் குறிப்பிட்ட பகுதிகளைத் தூண்டும் திறன் கொண்ட மின்முனைகளைக் கொண்டிருக்கும் .

மனித மூளையுடன் இவை போன்ற கருவிகளை இணைக்கின்ற பூர்வாங்கப் பரிசோதனைகளை மனிதர்களில் நடத்துவதற்கு அமெரிக்காவின் சுகாரத் துறை நியூரோலிங் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்தத் தொழிற் நுட்பப் பரிசோதனை ஏற்கனவே விலங்குகளில் வெற்றிகரமாகச் செயற்படுத்தப்பட்டிருப்பதாக அந்த நிறுவனம் கூறுகிறது. அதேசமயம் பரிசோதனை முயற்சிகளுக்காகக் குரங்குகள், மந்தைகள், பன்றிகள் உட்பட ஆயிரக்கணக்கான விலங்குகளைக் கொன்றதாக அண்மையில் நியூரோலிங் மீது பலத்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

மனித மூளையையும் செயற்கை நுண்ணறிவையும் இணைத்துத் தொழிற்படச் செய்கின்ற இந்தத் திட்டம் ஒருவேளை வெற்றி பெற்றால் மனித குல வரலாற்றிலும் அறிவியலிலும் அது ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமையும்.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">