19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்று சாதனை.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வந்தது. இத்தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இறுதிப்போட்டியில் இந்தியா – இங்கிலாந்து மோதின. நாணய சுழற்சயில் வென்ற இந்தியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து வீராங்கனைகள் இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

இறுதியில் 17.1 ஓவரில் இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 68 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து, 69 ஓட்டங்கள் எடுத்தால் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 சாம்பியன் பட்டம் வெல்லலாம் என்ற முனைப்புடன் இந்தியா தொடக்க வீராங்கனைகள் களமிறங்கினர். தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய கேப்டன் ஷிபாலி வர்மா 15 ஓட்டங்களிலும் , ஸ்வேதா 5 ஓட்டங்களிலும் வெளியேறினர். அடுத்துவந்த சவுமியா திவாரி , திரிஷா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

திரிஷா 24 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 14 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி இலக்கான 69 ஓட்டங்களை எடுத்தது. சவுமியா திவாரி 24 ஓட்டங்களுடனும் , ஹிரிஷிதா ஓட்டம் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். இதன் மூலம், இங்கிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 19 வயதிற்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 சாம்பியன் பட்டத்தை இந்தியா வென்றது.