இந்திய அணியுடனான இரண்டாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 16 ஓட்டங்களினால் வெற்றி.

இந்திய அணியுடனான இரண்டாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 16 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

பூனேவில் இடம்பெற்ற நேற்றையப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 206 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக அணித்தலைவர் தசுன் ஷானக்க 56 ஓட்டங்களையும்,குசல் மெண்டிஸ் 52 ஓட்டங்களையும், சரித் அசலங்க 37 ஓட்டங்களையும், பெத்தும் நிஸ்ஸங்க 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில், இந்திய அணியின் உம்ரான் மாலிக் 48 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களையும், அக்ஷர் படேல் 24 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 12 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், 207 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 190 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது. அணிசார்பில் அதிகபடியாக அக்ஷர் படேல் 65 ஓட்டங்களையும், சூர்யகுமார் யாதவ் 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில், இலங்கை அணியின் தில்ஷான் மதுஷங்க 45 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும், கசுன் ராஜித்த 22 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும் பெற்றனர். இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 14 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த போட்டியில் இலங்கை அணி வெற்றியீட்டியதன் ஊடாக, எதிர்வரும் 07ம் திகதி நடைபெறவுள்ள மூன்றாவது இருபதுக்கு இருபது போட்டியின் எதிர்பார்ப்பை இலங்கை அணி வலுப்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.