FIFA-மொராக்கோவிடம் போர்ச்சுகல் தோல்வி கண்ணீர் விட்டு அழுத ரொனால்டோ.
கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று இரவு 8.30 மணிக்கு அல்துமாமா மைதானத்தில் நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் மொராக்கோ – போர்ச்சுகல் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பாக துவங்கிய போட்டியின் முதல் பாதியில் மொரோக்கோ அணி வீரர் யூசுப் என் நெஸ்ரி ஆட்டத்தின் 42- வது நிமிடத்தில் தனது அணிக்கான முதல் கோலை அடித்து அசத்தினார்.
இதன்மூலம் ஆட்டத்தின் முதல் பாதியில் 1-0 என்ற கோல் கணக்கில் மொரோக்கோ அணி முன்னிலை வகித்தது. இதனைத்தொடர்ந்து அனல் பறந்த போட்டியின் இரண்டாவது பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்துக்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
பின்னர் வழங்கப்பட்ட கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதன்மூலம் போர்ச்சுக்கல் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மொராக்கோ அணி அரையிறுதிக்கு முன்னேறியதுடன், உலகக் கோப்பையில் முதன் முறையாக அரை இறுதிக்கு தகுதி பெறும் ஆப்பிரிக்க அணி என்ற சாதனையையும் படைத்துள்ளது.
இந்நிலையில் உலகக் கோப்பையில் மொராக்கோவிடம் போர்ச்சுகல் தோல்வியடைந்ததை அடுத்து கிறிஸ்டியானோ ரொனால்டோ கண்ணீர் விட்டு அழுதார். முன்னதாக ரொனால்டோ இல்லாமல் போர்ச்சுகல் அணி களமிறங்கியது. இம்முறையும் ரொனால்டோ முதலாவதாக ஆடவில்லை. போட்டி தொடங்கி 50 நிமிடங்கள் முடிந்திருந்தநிலையில், ரொனால்டோ களமிறக்கப்பட்டார்.
இருந்தும் இரண்டாம் பாதியில் மொராக்கோவின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது. ரொனால்டோ இருமுறை முயன்றும் அது மொராக்கோ கோல் கீப்பர் யாசின் பௌனௌவால் திறம்பட தடுக்கப்பட்டது. இதனால், கோல்கீப்பரின் தடுப்பாட்டத்தால் போர்ச்சுகல் அணி பரிதாபமாக வெளியேறியது. கடந்த போட்டியில் ரொனால்டோவுக்கு பதிலாக களமிறக்கப்பட்டு ஹாட்ரிக் கோல் அடித்து அசத்திய 21 வயதான கோன்காலோ ரமோஸ்மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
அதற்கேற்ப ஆட்டத்தின் இரண்டாவது நிமிடமே கோல் அடிக்க முயன்றார். ஆனால் அதுவும் கைகூடவில்லை. முன்னதாக போர்ச்சுகல் அணியானது லீக் சுற்றில் கானாவை 3-2 என்ற கோல் கணக்கிலும், உருகுவேவை 2-0 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தியது. கடைசி ஆட்டத்தில் தென் கொரியாவிடம் 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது. கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் சுவிட்சர்லாந்தை 6-1 என்ற கோல் கணக்கில் பந்தாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.