FIFA- நெதர்லாந்தை வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்தது ஆர்ஜன்டீனா
நெதர்லாந்துக்கு எதிராக லுசெய்ல் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (09) இரவு நடைபெற்ற மிகவும் பரபரப்பான கால் இறுதிப் போட்டியில் 4 – 3 என் பெனல்டி முறையில் வெற்றிபெற்ற ஆர்ஜன்டீனா நான்காவது தடவையாக பீபா உலகக் கிண்ண அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.
போட்டியின் 73ஆவது நிமிடத்தில் ஆர்ஜன்டீனா 2 – 0 என்ற கோல்கள் வித்தியாசத்திலும் உபாதையீடு நேரத்தின் 10ஆவது (90 + 10) நிமிடத்தில் 2 – 1 என்ற கோல்கள் வித்தியாசத்திலும் முன்னிலையில் இருந்தது.
ஆனால் உபாதையீடு நேரத்தில் 2 நிமிடங்கள் மீதமிருக்கையில் நெதர்லாந்து கோல் நிலையை சமப்படுத்த ஆர்ஜன்டீ வீரர்களும் இரசிகர்களும் அதிர்ந்து போயினர். எனினும் பெனல்டிகளில் ஆர்ஜன்டீனா வென்றபோது அணி வீரர்களும் இரசிகர்களும் வானை நோக்கி கடவுளுக்கு தமது நன்றிகளை செலுத்தி ஆரவாரம் செய்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
அப் போட்டி ஆரம்பித்ததும் இரண்டு அணிகளும் கோல் போடுவதைக் குறியாகக் கொண்டு விளையாடியபோதிலும் முதல் 34 நிமிடங்களில் இரண்டு அணிகளும் கோல் போடாமல் இருந்தன.
ஆனால், போட்டியின் 35ஆவது நிமிடத்தில் மத்திய களத்திலிருந்து லயனல் மெஸி பரிமாறிய பந்தை நோயல் மொலினா கோலாக்கி ஆர்ஜன்டீனாவை 1 – 0 என முன்னிலையில் இட்டார்.
அதனைத் தொடர்ந்து உற்சாகம் அடைந்த ஆர்ஜன்டீனா எதிரணியின் கோல் எல்லையை ஆக்கிரமித்த வண்ணம் இருந்தது. மறுபுறத்தில் நெதர்லாந்தும் அவ்வப்போது கோல் நிலையை சமப்படுத்த கடும் முயற்சியில் ஈடுபட்டது. இடைவெளையின் போது ஆர்ஜன்டீனா 1 – 0 என்ற கோல் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தது.
இடைவேளையின் பின்னர் இரண்டு அணிகளும் கோல் போடுவதற்கு தீவிரமாக ஈடுபட்டதால் ஆட்டம் சூடுபிடித்தது. ஆர்ஜன்டீன வீரர்கள் ஆக்ரோஷத்துடன் விளையாடி எதிரணியின் கோல் எல்லையை ஆக்கிரமிக்க நெதர்லாந்து அணியினர் அவற்றைத் தடுத்தவண்ணம் இருந்தனர். இதனிடையே அவ்வப்போது எதிர்த்தாடுவதிலும் ஈடுபட்டனர்.
என்வாறாயினும் போட்டியின் 71ஆவது நிமிடத்தில் டம்ஃப்ரைஸை நெதர்லாந்து பின்கள வீரர் தனது பெனல்டி எல்லைக்குள் வைத்து விதிகளுக்கு முரணான வகையில் வீழ்த்தியதால் ஆர்ஜன்டீனாவுக்கு பெனல்டி வழங்கப்பட்டது.
அப் பெனல்டியை லயனல் மெஸி கோலாக்க 73ஆவது நிமிடத்தில் ஆர்ஜன்டீனா 2 – 0 என முன்னிலை அடைந்தது. இதன் மூலம் ஆர்ஜன்டீனா சார்பாக உலகக் கிண்ணப் போட்டிகளில் அதிக கோல்கள் புகுத்தியிருந்த கேப்றியல் பட்டிஸ்டுட்டாவின் 10 கோல்கள் என்ற சாதனையை மெஸி சமப்படுத்தினார்.
அடுத்த 3ஆவது நிமிடத்தில் ஆர்ஜன்டீன கோல் எல்லையை நெதர்லாந்து வீரர்கள் ஆக்கிரமித்ததன் பலனான கோர்ணர் கிக் ஒன்று கிடைத்தது. அதன்போது இரண்டு வீரர்கள் மோதிக்கொண்டதால் இருவருக்கும் மஞ்சள் அட்டை காட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 78ஆவது நிமிடத்தில் மாற்று வீரராக களம் புகுந்த வூட் வெக்ஹோர்ஸ்ட் நெதர்லாந்தின் ஹீரோவானார். அவர் 45ஆவது நிமிடத்தில் மாற்றுவீரர்கள் ஆசனத்தில் இருந்தபோது விதிகளை மீறியதால் மஞ்சள் அட்டைக்கு இலக்காகியிருந்தார்.
எனினும் மாற்றுவீராக களம் புகுந்த சொற்ப நேரத்தில் வெக்ஹோர்ஸ்ட் தலையால் முட்டி கோல் போட்டு (83 நி.) நெதர்லாந்து அணிக்கு உற்சாகத்தைக் கொடுத்தார்.
உபாதையீடு நேரத்தில் மத்தியஸ்தருடன் மெஸி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மஞ்சுள் அட்டைக்கு (90 + 10 நி.) இலக்கானார். அடுத்த நிமிடத்தில் வூட் வெக்ஹோர்ஸ்ட் தனது இரண்டாவது கோலைப் போட்டு நெதர்லாந்து சார்பாக கோல் நிலையை 2 – 2 என சமப்படுத்தினார்.
இரண்டு நிமிடங்கள் கழித்து ஆட்டம் 2 – 2 என வெற்றிதோல்வியின்றி முடிவடைந்ததால் மத்தியஸ்தரினால் மேலதிக நேரம் வழங்கப்பட்டது.
30 நிமிட மேலதிக நேரத்தில் இரண்டு அணிகளும் வெற்றிகோலைப் போடத் தவறியதால் மத்தியஸ்தரினால் பெனல்டி முறை அமுல்படுத்தப்பட்டது. இதில் 4 – 3 என ஆர்ஜன்டீனா வெற்றிபெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.