தென் கொரியாவை வீழ்த்தி கால் இறுதிக்குள் நுழைந்தது பிரேஸில்.
தென் கொரியாவுக்கு எதிராக கத்தார், ரஸ் அபு அபூத், ஸ்டேடியம் 974 விளையாட்டரங்கில் நேற்று (05) இரவு நடைபெற்ற 6ஆவது இரண்டாம் சுற்று போட்டியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய பிரேஸில் 4 – 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்ட கால் இறுதிச் சுற்றில் விளையாட தகுதிபெற்றது.
இப் போட்டியில் வெற்றியீட்டிய பிரேஸில் கால் இறுதியில் குரோஏஷியாவை எதிர்வரும் சனிக்கிழமை சந்திக்கவுள்ளது.ஐந்து தடவைகள் உலக சம்பியனான பிரேஸில் நேற்றைய போட்டியில் முதல் 36 நிமிடங்களுக்குள் 4 கோல்களைப் போட்டு தனது வெற்றியை முன்னோக்கி நகர்த்தியுள்ளது.தென் கொரியாவுடனான போட்டியில் ஆரம்பம் முதல் கோல் போடுவதை இலக்ககாக் கொண்டு விளையாடிய பிரேஸில் 13 நிமிடங்களுக்குள் 6 நிமிட இடைவெளியில் 2 கோல்களைப் போட்டு முன்னிலை அடைந்தது.
போட்டியின் 7ஆவது நிமிடத்தில் ரஃபின்ஹா வலதுபுறத்திலிருந்து பரிமாறிய பந்தைப் பெற்றுக்கொண்ட வினிசியஸ் கோல் போட்டு பிரேஸிலை முன்னிலையில் இட்டார். உலகக் கிண்ண இறுதிச் சுற்றில் வினிசியஸ் போட்ட முதலாவது கோல் இதுவாகும்.
மூன்று நிமிடங்கள் கழித்து தென் கொரியாவின் பெனல்டி எல்லைக்குள் விதிகளுக்கு முரணான வகையில் ரிச்சலிசன் வீழ்த்தப்பட்டதால் பிரேஸிலுக்கு பெனல்டி வழங்கப்பட்டது. ரிச்சலிசனுக்கு முதலுதவி வழங்கப்பட்ட பின்னர் 13ஆவது நிமிடத்தில் நேமார் அப் பெனல்டியை கோலாக்கி பிரேஸிலை 2 – 0 என முன்னிலையில் இட்டார்.
இதனை அடுத்து தென் கொரியா தடுத்தாடும் நிலைக்கு தள்ளப்பட்டது.எனினும் ரிச்சலிசன், மார்கினோஸ், தியாகோ சில்வா ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற பந்துபரிமாற்றங்களைத் தொடர்ந்து மீண்டும் பந்தைப் பெற்றுக்கொண்ட ரிச்சலிசன் 29ஆவது நிமிடத்தில் பிரேஸிலின் கோல் எண்ணிக்கையை 3ஆக உயர்த்தினார்.
ஏழு நிமிடங்கள் கழித்து மிண்டும் சிறப்பான பந்து பரிமாற்றங்களுடன் 4ஆவது கோலை பிரேஸில் போட்டது.இடைவேளையின் போது 4 – 0 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை அடைந்த பிரேஸில், இடைவேளைக்குப் பின்னர் சற்று ஆசுவாசமாக விளையாடியது.இதனிடையே போட்டியின் 76ஆவது நிமிடத்தில் தென் கொரியா சார்பாக பாய்க் சியங்-ஹோ ஆறுதல் கோல் ஒன்றைப் போட்டார்.
அதனைத் தொடர்ந்து இரண்டு அணிகளும் கோல் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சித்தன. ஆனால், அவை பலனளிக்காமல் போக பிரேஸில் 4 – 1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கால் இறுதியில் விளையாட தகுதிபெற்றது. தென் கொரியா இரண்டாம் சுற்றுடன் நாடு திரும்புகிறது.
நேற்றைய போட்டி முடிவில் பேலேக்கு நல்ல சுகம் வேண்டி பிரேஸில் வீரர்கள் பதாகை ஒன்றை ஏந்தி தமது வெற்றியை பேலேக்கு சமர்ப்பணம் செய்தனர்.