பெல்ஜியதில் மொராக்கோ ரசிகர்கள் கலவரம்.
உலகக் கோப்பை கால்பந்தில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள பெல்ஜியம் அணி 0-2 என்ற கோல் கணக்கில் 22-வது இடத்தில் இருக்கும் மொராக்கோவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
இந்த ஆட்டம் முடிந்த சில நிமிடங்களில் பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் கலவரம் ஏற்பட்டு இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. பெல்ஜியத்துக்கு குடிபெயர்ந்து இருக்கும் மொராக்கோ நாட்டை சேர்ந்த ரசிகர்கள் பலர் தலைநகர் பிரஸ்சல்ஸ் மற்றும் ஆன்ட்வெர்ப் ஆகிய நகரங்களில் தெருக்களில் திரண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டதுடன் கார் மற்றும் இருசக்கர வாகனங்களை தீவைத்து கொளுத்தி ரகளையில் ஈடுபட்டனர்.
உடனடியாக போலீசார் விரைந்து வந்து கண்ணீர் புகை மற்றும் வாகனம் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து கலவரக்காரர்களை கலைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது தொடர்பாக போலீசார் 12 பேரை கைது செய்துள்ளனர்.
இதேபோல் நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாம், ரோட்டர்டாம் நகரங்களிலும் மொராக்கோ அணி ஆதரவாளர்களின் கொண்டாட்டத்தால் பிரச்சினை ஏற்பட்டது. தெருக்களில் திரண்டு இருந்த மொராக்கோ அணியின் ஆதரவாளர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். அப்போது சில ரசிகர்கள் போலீசாரின் வாகனத்தை நோக்கி கல்வீசினர். இதனால் சிறிது நேரம் அந்த இடங்களில் பரபரப்பு நிலவியது.