ஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து: பிரேசில் அணியிடம் வீழ்ந்தது இந்தியா.
7-வது ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் உள்ள புவனேஷ்வர், கோவா, நவிமும்பை ஆகிய நகரங்களில் கடந்த 11-ஆம் தேதி தொடங்கியது. இந்த கால்பந்து விழாவில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இந்திய பெண்கள் அணி ஜூனியர் உலக கோப்பை தொடரில் கால்பதிப்பது இதுவே முதல் முறையாகும். அதாவது இந்தியாவில் முதல்முறையாக நடைபெறும் இந்த போட்டியில், போட்டியை நடத்தும் நாடு என்ற வகையில் இந்திய அணிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த தொடரில் ஏற்கனவே நடந்து முடிந்த லீக் போட்டிகளில் இந்திய அணி அமெரிக்கா மற்றும் மொரோக்கோ அணியிடம் தோல்வியை தழுவி இருந்தது.
இந்த நிலையில் இன்று தனது கடைசி லீக் போட்டியில் பிரேசில் அணியை இந்தியா எதிர்கொண்டது. இந்த போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிரேசில் வீராங்கனைகள் கோல் மழைகளை பொழிந்தனர். பிரேசில் அணியின் சார்பாக பெர்கான் (11வது நிமிடம்), அலின் (40வது நிமிடம் மற்றும் 51வது நிமிடம்), லாரா ( 86வது நிமிடம் மற்றும் 90+3′ நிமிடம்) கோல் அடித்தனர். இறுதிவரை இந்திய வீராங்கனைகளால் பதிலுக்கு ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதனால் பிரேசில் அணி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இதன் மூலம் 3 தோல்விகளுடன் இந்திய அணி உலகக் கோப்பை பயணத்தை நிறைவு செய்துள்ளது. இன்று முன்னதாக நடைபெற்ற போட்டியில் ஐரோப்பிய சாம்பியனான ஜெர்மனி 3-1 என்ற கோல் கணக்கில் , நியூசிலாந்தை தோற்கடித்து காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. அதே போல் புவனேஸ்வரில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் ஆப்பிரிக்க அணியான நைஜீரியா 2-1 என்ற கோல் கணக்கில் சிலியை வீழ்த்தி தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்து காலிறுதிக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.