ஆசிய சம்பியன் இலங்கையை வீழ்த்தி இன்ப அதிர்ச்சி கொடுத்தது. நமிபியா
16 அணிகள் பங்கேற்கும் 8வது டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கி நவம்பர் 13ந் தேதி வரை நடைபெறுகிது. 16 அணிகளில் 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறின. மீதமுள்ள 4 அணிகளை தேர்வு செய்யும் விதமாக முதல் சுற்று ஆட்டங்களில் 8 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன.
இந்நிலையில் டி20 உலக கோப்பையின் முதல் சுற்றின் முதலாவது ஆட்டத்தில் இலங்கை மற்றும் நமிபியா அணிகள் விளையாடுகின்றன. இந்த ஆட்டத்துக்கான நாணய சுழற்சயில் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.இதையடுத்து முதலில் களம் இறங்கிய நமிபியா அணியில் மைக்கேல் வான் லிங்கன் மற்றும் திவான் லா காக் ஆகியோர் களம் இறங்கினர். இதில் மைக்கேல் 3 ஓட்டங்களும் , திவான் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ஓட்டங்கள் சேர்த்தது.
அந்த அணி தரப்பில் பிரைலின்க் 28 பந்துகளில் 44 ஓட்டங்களும் , ஜே.ஜே.ஸ்மித் ஆட்டமிழக்காமல் 16 பந்துகளில் 31 ஓட்டங்களும் எடுத்தனர். இலங்கை அணி தரப்பில் மதுஷான் 2 விக்கெட்டும், மகேஷ் தீக்ஷனா, சமீரா, கருணரத்னே,ஹசரங்கா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 164 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி ஆடியது.
அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் நமிபியா பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி இலங்கை அணியை திணறடித்தனர். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நிசாங்கா 9 ஓட்டங்களும் , குசல் மெண்டிஸ் 6 ஓட்டங்களும் ஆட்டம் இழந்தனர்.
அடுத்து வந்த டி சில்வா 12 ஓட்டங்களுடனும் , குணதிலகா ஓட்டம் எதுவும் எடுக்காமலும், ராஜபக்சே 20 ஓட்டங்களிலும் ஆட்டம் இழந்தனர். நமிபியா பந்துவீச்சாளர்கள் மிகவும் கட்டு கோப்புடன் பந்து வீசினர். ஒரு புறம் எடுக்க முடியாமல் இலங்கை அணி வீரர்கள் திணற மறுபுறம் நமிபியா வீரர்கள் இலங்கையின் விக்கெட்டுகளை மளமளவென வீழ்த்தினர்.
இறுதியில் அந்த அணி 19 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ஓட்டங்களில் அட்டமிழந்தது . இதன் மூலம் நமிபியா 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆசிய சாம்பியனை வீழ்த்தி வெற்றி பெற்றது. நமிபியா அணி தரப்பில் பெர்னார்ட், பென் ஷிகோங்கா, ஜான் பிரைலின்க், டேவிட் வைஸ் தலா 2 விக்கெட்டும், ஜே.ஜே.ஸ்மித் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். முதல்போட்டியில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்று நமிபியா அணி கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்ததுள்ளது.