20 ஓவர் உலக கோப்பை- ஆஸ்திரேலியா சென்றது இந்திய கிரிக்கெட் அணி

இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்பட 16 அணிகள் பங்கேற்கும் 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் வருகிற 16-ந்தேதி முதல் நவம்பர் 13-ந்தேதி வரை நடக்கிறது.

இதில் நேரடியாக சூப்பர்12 சுற்றில் கால்பதிக்கும் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் வருகிற 23-ந்தேதி பாகிஸ்தானுடன் மெல்போர்னில் பலப்பரீட்சை நடத்துகிறது. இதையடுத்து உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி நேற்று அதிகாலை மும்பையில் இருந்து விமானம் மூலம் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு புறப்பட்டது.

கப்டன் ரோகித்சர்மா, துணை கப்டன் லோகேஷ் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட், தீபக் ஹூடா, அக்‌ஷர் பட்டேல், அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர்குமார், அர்ஷ்தீப்சிங், ஹர்ஷல் பட்டேல் ஆகிய 14 வீரர்களும், அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உள்ளிட்ட உதவியாளர்களும், உடல்தகுதி நிபுணர்களும் அங்கு சென்றுள்ளனர்.

உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியின் மாற்று வீரர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ள தீபக் சாஹர், ரவி பிஷ்னோய், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடர் முடிந்ததும் அடுத்த வாரம் ஆஸ்திரேலியாவுக்கு கிளம்புவார்கள். இதே போல் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு முழு உடல்தகுதியை எட்டுவதில் கவனம் செலுத்தி வரும் மற்றொரு மாற்று வீரரான வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியும் இவர்களுடன் சேர்ந்து புறப்படுவார் என்று தெரிகிறது.

காயத்தால் விலகிய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு மாற்று வீரர் இன்னும் அறிவிக்கப்படாவிட்டாலும் அனேகமாக முகமது ஷமிக்கே அதிர்ஷ்டம் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெர்த் நகரில் ஒரு வார காலம் பயிற்சி முகாமில் ஈடுபடும் இந்திய அணியினர் அதன் பிறகு இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுவதற்காக பிரிஸ்பேன் செல்கிறார்கள். இந்திய அணி பயிற்சி ஆட்டங்களில் ஆஸ்திரேலியா (அக்.17) மற்றும் நியூசிலாந்து (அக்.19) அணிகளுடன் மோத உள்ளது.