தென் ஆப்பிரிக்கா அணி 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி.

இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டி-20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், முதலில் நடந்த டி-20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இந்நிலையில், இவ்விரு அணிகள் மோதிய முதலாவது ஒருநாள் போட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் நாணய சுழற்சயில் வென்ற இந்திய அணி கப்டன் ஷிகர் தவன் பந்துவீச்சை தேர்வுசெய்தார்.

மழையால் ஏற்பட்ட தாமதம் காரணமாக போட்டி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டு இருந்தது. தென் ஆப்பிரிக்கா அணியில் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ஜென்னெமேன் மாலன், குவிண்டன் டி காக் நிதானமான தொடக்கத்தை ஏற்படுத்தினர். மாலன் 42 பந்துகளில் 22 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில், ஷர்துல் தாக்கு பந்துவீச்சில் ஸ்ரேயஸ் ஐயரிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார் .

பின்னர் களமிறங்கிய கப்டன் டெம்பா பவுமா 8 ஓட்டங்களிலும் ஐடன் மார்க்ரம் டக் அவுட்டாகியும் ஆட்டமிழந்தனர். மறுமுனையில் அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட குவிண்டன் டி காக் 54 பந்துகளில் 48 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஹென்ரிச் கிளாசென்- டேவிட் மில்லர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி சீரான இடைவெளியில் ஓட்டங்களை குவித்தனர். இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். இறுதிவரை இந்திய பந்துவீச்சாளர்களால் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்பிற்கு 249 ஓட்டங்கள் குவித்தது.

இதையடுத்து 250 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய கப்டன் தவான் 4 ஓட்டங்களிலும் சுப்மன் கில் 3 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இவர்களை தொடர்ந்து கெய்க்வாட் (19 ஓட்டங்கள் ) இஷான் கிஷன் (20 ஓட்டங்கள்) அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்திய அணி 51 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை இழந்து திணறியது. அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் அனுபவ வீரர்கள் சாம்சன்- ஷ்ரேயஸ் ஈடுபட்டனர். இந்திய அணியின் ஸ்கோர் 211 ஆக இருந்தபோது சிறப்பாக விளையாடிவந்த ஷ்ரேயஸ் அரைசதம் கடந்த நிலையில் நிகிடி பந்துவீச்சில் ரபாடாவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.

பின்னர் சாம்சன்- ஷர்துல் தாக்குர் ஜோடி சேர்ந்தனர். ஒருமுனையில் சாம்சன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வர, ஷர்துல் தனது பங்கிற்கு 5 பவுண்டரிகளுடன் 33 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்திய அணி 8 விக்கெட்களை இழந்த நிலையில் கடைசி ஓவரில் வெற்றிக்கு வெற்றிக்கு 30 ஓட்டங்கள் தேவைப்பட்டது. களத்தில் சாம்சன்- பிஷ்னாய் இருந்தனர். ஷம்சி வீசிய பரபரப்பான கடைசி ஓவரில் சாம்சன் 19 ஓட்டங்கள் எடுக்க, இந்திய அணி 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வி அடைந்தது. சஞ்சு சாம்சன் 63 பந்துகளில் 86 ஓட்டங்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் நிகிடி 3 விக்கெட்களையும், ரபாடா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 1-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரில் முன்னிலை வகிக்கிறது.