• Tuesday, May 30, 2023

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli
SUBSCRIBE

கடைசி டி20 போட்டி: இந்தியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணி ஆறுதல் வெற்றி.

By Editor On Oct 5, 2022
107
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
DRAMA SCHOOL

SUPPORT TO MEIVELI

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரு ஆட்டங்களில்
தோல்வி அடைந்து தென் ஆப்பிரிக்க அணி ஏற்கனவே தொடரை இழந்து விட்டது. இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில்  நேற்று நடைபெற்றது.

இந்த போட்டியில் நாணய சுழற்சயில் வென்ற இந்திய அணியின் கப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி அணி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது. தொடக்க வீரர்களாக கப்டன் பவுமா மற்றும் டி காக் களமிறங்கினர். இந்த தொடரில் முதல் இரு போட்டிகளில் சோபிக்காத பவுமா இந்த போட்டியிலும் தென் ஆப்பிரிக்க ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். அவர் 3 ஓட்டங்களில் உமேஷ் பந்துவீச்சில் ரோகித் சர்மாவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

இதை தொடர்ந்து டி காக் உடன் ரைலி ரூசோவ் ஜோடி சேர்ந்தார். பவர் பிளேவை நன்கு பயன்படுத்தி ஓட்டங்கள் குவிக்க தொடங்கிய இந்த ஜோடி பவர்பிளே முடிந்த பிறகு பவுண்டரி மழைகளை பொழிந்தனர். நடு ஓவர்களில் இந்திய அணியின் பந்துவீச்சு டி காக்- ரைலி ரூசோவ் விடம் எடுபடவில்லை. சிறப்பாக ஆடிய டி காக் 33 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். தென் ஆப்பிரிக்க அணி 12.1 ஓவரில் 121 ஓட்டங்கள் எடுத்திருந்த போது ஷ்ரேயஸ் ஐயரின் சிறப்பான களத்தடுப்பால் டி காக் ரன் அவுட்டானார். அவர் 42 பந்துகளில் 68 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து ஸ்டப்ஸ் களம் புகுந்தார். அதிரடியை தொடர்ந்து வந்த ரைலி ரூசோவ் 27 பந்துகளில் அரைசதம் கடந்தார். ஒருமுனையில் ஸ்டப்ஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் ரூசோவ் இமாலய சிக்சர்களை விளாசி வந்தார். இதனால் தென் ஆப்பிரிக்க அணியின் ஓட்ட எண்ணிக்கை வெகுவாக உயர்ந்தது. கடைசி ஓவரில் ரூசோவ் 48 பந்துகளில் சதம் கடந்தார்.

இது சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் அவரின் முதல் சதமாகும். இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 227 ஓட்டங்கள் குவித்தது. ரூசோவ் 48 பந்துகளில் 100 ஓட்டங்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணியின் தரப்பில் உமேஷ், தீபக் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 228 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இந்திய அணி விளையாடி களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக கப்டன் ரோகித் சர்மா- ரிஷப் பண்ட் களமிறங்கினர். இமாலய இலக்கு என்பதால் முதல் பந்து முதலே அதிரடி காட்ட வேண்டிய சூழ்நிலையில் இந்திய வீரர்கள் களமிறங்கினர். இருப்பினும் ரோகித் சர்மா தான் சந்தித்த 2-வது பந்திலே டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய ஷ்ரேயஸ், பார்னெல் பந்துவீச்சில் 1 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ரிஷப் பண்ட் உடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். சந்தித்த முதல் பந்தை பவுண்டரி விரட்டி ஓட்ட கணக்கை தொடங்கினார் தினேஷ் கார்த்திக். மறுமுனையில் பண்ட் 27 ஓட்டங்களில் (14 பந்துகள்) நிகிடி பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். சிறிது நேரம் அதிரடி காட்டிய தினேஷ் கார்த்திக் 21 பந்துகளில் 46 ஓட்டங்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் இந்திய அணி சரிவை நோக்கி சென்றது. சூர்யகுமார் யாதவ் (8 ஓட்டங்கள் ), அக்சர் படேல் (9 ஓட்டங்கள் ) ரவிச்சந்திரன் அஸ்வின் (2 ஓட்டங்கள் ) என அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். கடைசி கட்டத்தில் 9-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தீபக் மற்றும் உமேஷ் யாதவ் அதிரடி காட்டினர். இருப்பினும் இவர்களின் அதிரடி இந்திய அணியின் வெற்றிக்கு போதுமானதாக இல்லை. இறுதியில் இந்திய அணி 178 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வி அடைந்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் பிரிடோரிஸ் 3 விக்கெட்களும், மகாராஜ், நிகிடி, பார்னெல் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். இதன் மூலம் 49 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி ஆறுதல் வெற்றியுடன் டி20 தொடரை நிறைவு செய்துள்ளது. இந்திய அணி 2-1 என்ற கணக்கில் டி20 தொடரை வென்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது.

 

 

Prev Post

அர்ஜுன மகேந்திரனுடன் ரணில் விக்கிரமசிங்க சந்திப்பு : மறுத்தார் ஜனாதிபதி.

Next Post

இலங்கை மக்களிடையே பட்டினியும் வறுமையும் பரவி வருவது அவர்களின் மனித உரிமை மீறலாகும்: சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவிப்பு.

© 2023 - Meiveli. All Rights Reserved.