சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக சிக்சர்கள்: முதல் இடத்தில் ரோகித் சர்மா

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது.

மொகாலியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் இன்று 2-வது டி20 போட்டி நடைபெற்றது. ஆடுகளத்தில் ஈரப்பதம் காரணமாக போட்டி 8 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு 91 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவின் அதிரடியால் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ரோகித் சர்மா 4 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 20 பந்துகளில் 46 ஓட்டங்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த போட்டியில் முதல் சிக்சர் அடித்ததன் மூலம் கேப்டன் ரோகித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த போட்டிக்கு முன்னதாக 172 சிக்சர்களுடன் நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்டில் உடன் முதல் இடத்தில் இருந்தார் ரோகித் சர்மா. இந்த நிலையில் இன்று அவரின் சாதனையை முறியடித்து சர்வதேச டி20களில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற பெருமையை ரோகித் (176) பெற்றுள்ளார்.