மும்பை இந்தியன்ஸ் அணியில் ஜெயவர்த்தனே, ஜாகீர்கானுக்கு புதிய பொறுப்பு.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இலங்கை முன்னாள் கேப்டன் மஹேலா ஜெயவர்த்தனே பணியாற்றி வந்தார். இந்த நிலையில் ஜெயவர்த்தனேவுக்கு புதிய பொறுப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.
அதாவது தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு மும்பை இந்தியன்ஸ் மட்டுமின்றி, தென்ஆப்பிரிக்காவில் நடக்க உள்ள 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான எம்.ஐ. கேப்டவுன் அணியும், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க உள்ள பிரிமீயர் லீக் 20 ஓவர் போட்டிக்கான எம்.ஐ எமிரேட்ஸ் ஆகிய அணிகளும் சொந்தமாக உள்ளது.
உலக அளவிலான இந்த மூன்று அணிகளையும் ஒருங்கிணைத்து அதற்குரிய உயர்செயல்பாட்டு தலைவராக ஜெயவர்த்தனே நியமிக்கப்பட்டு உள்ளனர். மூன்று அணிகளின் வளர்ச்சிக்கு வகுக்கப்படும் திட்டமிடுதலில் ஜெயவர்த்தனே முக்கிய பங்காற்றுவார்.
அத்துடன் ஒவ்வொரு அணிகளின் பயிற்சியாளர், உதவி பயிற்சியாளர்களின் செயல்பாடுகளை கவனித்து தகுந்த ஆலோசனைகளை வழங்குவார். இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் மும்பை இந்தியன்ஸ் அணியின் கிரிக்கெட் ஆபரேட்டிங் இயக்குனராக இருந்தார்.
இப்போது அவர் ஒட்டுமொத்த அணிகளின் கிரிக்கெட் மேம்பாட்டு இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளார். ஜெயவர்த்தனேவுக்கு வேறு பொறுப்பு வழங்கப்பட்டு இருப்பதால் மும்பை இந்தியன்சுக்கு விரைவில் புதிய தலைமை பயிற்சியாளர் நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது.