இலங்கை அணி 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது

ஆசியக் கிண்ணத் தொடரை கைப்பற்றியது இலங்கை அணி

ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியே இலங்கை சம்பியனானது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணியின் தலைவர் பாபர் அஸாம், தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, முதலாவது ஓவரிலேயே குசல் மென்டிஸை நசீம் ஷாவிடம் இழந்ததுடன், பதும் நிஸங்கவையும் விரைவிலேயே ஹரிஸ் றாஃப்பிடம் பறிகொடுத்தது. தொடர்ந்து வந்த தனுஷ்க குணதிலகவும் விரைவிலேயே றாஃப்பிடம் வீழ்ந்ததுடன், 28 (21) ஓட்டங்களுடன் இஃப்திஹார் அஹ்மட்டிடம் தனஞ்சய டி சில்வாவும் சிறிது நேரத்திலேயே வீழ்ந்தார். அணித்தலைவர் தசுன் ஷானகவும் வந்த வேகத்திலேயே ஷடாப் கானிடம் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

பின்னர் விரைவாக ஓட்டங்களைப் பெற்ற வனிடு ஹஸரங்க 36 (21) ஓட்டங்களைப் பெற்ற நிலையில் றாஃப்பிடம் வீழ்ந்த நிலையில், பானுக ராஜபக்‌ஷவின் ஆட்டமிழக்காத 71 (45), சாமிக கருணாரத்னவின் ஆட்டமிழக்காத 14 (14) ஓட்டங்களுடன் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு 171 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், ஆரம்பத்திலேயே அஸாம், பக்கர் ஸமனை பிரமோத் மதுஷனிடம் பறிகொடுத்தது.

இதைத் தொடர்ந்து மொஹமட் றிஸ்வானும், அஹ்மட்டும் இனிங்ஃப்ஸை நகர்த்திய நிலையில் மதுஷனிடம் 32 (31) ஓட்டங்களுடன் அஹ்மட் வீழ்ந்தார். இரண்டு ஓவர்களிலேயே மொஹமட் நவாஸும், றிஸ்வானும் அடுத்தடுத்த ஓவர்களில் சாமிக கருணாரத்ன, ஹஸரங்கவிடம் வீழ்ந்தனர். றிஸ்வான் 55 (49) ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

ஹஸரங்கவின் இதே ஈவரிலேயே ஆசிப் அலி, குஷ்டில் ஷாவும் ஆட்டமிழந்த நிலையில், அடுத்த ஓவரில் ஷடாப் வீழ்ந்ததோடு, அதற்கடுத்த ஓவரில் மதுஷனிடம் ஷா விழுந்ததோடு, இனிங்ஸின் இறுதிப் பந்தில் கருணாரத்னவ்விடம் றாஃப் விழ 20 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 147 ஓட்டங்களையே பெற்ற பாகிஸ்தான் 23 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இத்துடன் ஆசியக் கிண்ணத் தொடரில் ஆறாவது தடவையாக இலங்கை சம்பியனாகியுள்ளது.