தெற்காசிய பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் :பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி.
6-வது தெற்காசிய பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 7 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.
லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள நடப்பு சாம்பியன் இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை நேற்று சந்தித்தது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றியுடன் போட்டியை தொடங்கியது.
இதன் மூலம் இந்திய அணி இந்த போட்டி தொடரில் தொடர்ந்து 27 ஆட்டங்களில் தோல்வியை சந்திக்காமல் வீறுநடை போடுகிறது. 21-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு முதல் கோல் வந்தது. பாகிஸ்தான் கேப்டன் மரியா ஜமில்கான் பந்தை தடுக்க முயற்சித்த போது, பந்து அவரது காலில் பட்டு கோல் வலைக்குள் புகுந்து சுயகோலாக மாறியது. இந்திய அணி தரப்பில் டாங்மி கிரேஸ் 23-வது நிமிடத்திலும், சவுமியா கடைசி நிமிடத்திலும் கோல் அடித்தனர். இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் 10-ந் தேதி மாலத்தீவை எதிர்கொள்கிறது.