முதல் ஒருநாள் போட்டி: பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி வெற்றி.

கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது.

அத்தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி ஆஸ்திரேலியாவின் கெய்ர்ன்ஸில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் நாணய சுழற்சயில் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 232 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக கான்வே 46 ஓட்டங்களுடனும், வில்லியம்சன் 45 ஓடங்களுடனும் , லதாம் 43 ஓட்டங்களும் எடுத்தனர். அடுத்து 233 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஆரோன் பின்ச் மற்றும் டேவிட் வார்னர் களம் இறங்கினர்.

இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 12 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 44 ஓட்டங்கள் எடுத்து தடுமாறியது. அந்த அணியில் பின்ச் ( 5 ஓட்டங்கள் ), வார்னர் ( 20 ஓட்டங்கள் ), ஸ்மித் ( 1 ஓட்டம் ), லபுஸ்சேன் ( 0 ), ஸ்டோய்னிஸ் ( 5 ஓட்டங்கள் ) எடுத்திருந்த நிலையில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி மிகவும் தடுமாறியது. இதையடுத்து 6 விக்கெட்டுக்கு அலெக்ஸ் கேரி மற்றும் கேமரூன் க்ரீன் களம் இறங்கினர். இந்த ஜோடி மிகச்சிறப்பாக ஆடி இருவரும் அரைசதம் அடித்தனர்.

இறுதியில் அணியின் ஓட்ட எணிக்கை 202 ஆக உயர்ந்த போது சதத்தை நெருங்கிய அலெக்ஸ் கேரி 85 ஓட்ட்ங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார் . கேரி – க்ரீன் ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 158 ஓட்டங்கள் சேர்த்தது. இதையடுத்து களம் இறங்கிய அதிரடி ஆல்-ரவுண்டர் மேக்ஸ்வெல், ஸ்டார்க் ஆகியோர் முறையே 2 ஓட்டங்கள் , 1 ஓடட்டும் எடுத்த நிலையில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 45 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 233 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா தரப்பில் கேமரூன் க்ரீன் ஆட்டமிழக்காமல் 89 ஓட்டங்கள் குவித்தார். அலெக்ஸ் கேரி 85 ஓட்டங்கள் எடுத்திருந்தார். நியூசிலாந்து அணி தரப்பில் ட்ரென்ட் போல்ட் 4 விக்கெட்டும், மேட் ஹென்ட்ரி, லாக்கி பெர்குசன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற முன்னிலை வகிக்கிறது. இந்த அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி வரும் 8-ந் தேதி இதே மைதானத்தில் நடைபெறுகிறது.