மத்திய கிழக்கு போர் சூழல்: அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நாடாளுமன்றத்தில்  தெளிவுபடுத்திய   ஜனாதிபதி

Meiveli Media Team

 

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழலைக் கட்டுப்படுத்துவதற்கு, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் அமைதியான உலகை கட்டியெழுப்புவதற்காக தகுந்த அர்ப்பணிப்பையும் வழிகாட்டலையும் முன்னெடுக்க வேண்டுமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இன்று நாடாளுமன்றத்தில் மத்திய கிழக்கு போர் சூழல் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். எந்தவொரு போரும் எந்தவொரு மக்கட் குழுமத்திற்கும் சாதகமான சூழலை உருவாக்குவதில்லை. தொழில்நுட்ப ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் அதிநவீன ஆயுதங்கள் தயாரிக்கப்படும் இக்காலத்தில், போர் எவ்வளவு பேரழிவை ஏற்படுத்தும் என்பது குறித்து நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, இந்த போருடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் அமைதியான உலகை நோக்கிய அர்ப்பணிப்பையும் வழிகாட்டல்களையும் முன்னெடுக்க வேண்டுமென்பதே இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடாகும், என்று குறிப்பிட்டார். இன்றையதினம் வெளிநாட்டுச் செலாவணி சட்டம் தொடர்பான ஒழுங்குவிதிகள் மீதான விவாதம் இடம்பெறவுள்ளதுடன், எதிர்க்கட்சியினால் சமர்ப்பிக்கப்படும் ஒத்திவைப்புவேளைப் பிரேரணை மீதான விவாதமும் இடம்பெறவுள்ளது. இதேவேளை, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் சூழல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கிடையில் இன்று  விசேட கலந்துரையாடல் ஒன்றும் நடைபெறவுள்ளது. அதேபோல், நாளை நுண் நிதி மற்றும் கடன் ஒழுங்குமுறை அதிகாரசபை சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நடைபெறவுள்ளது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஒத்திவைப்பு வேளை விவாதம் ஒன்றினை எதிர்வரும் 5ஆம் திகதி நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சற்று முன்னர் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்து, விசேட உரையாற்றினார்.