படிப்படியாக காணிகளை விடுவிக்க என்னாலான அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன்: வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவிப்பு

இடம்பெயர்ந்த மக்களின் வலி – வேதனை எனக்குத் தெரியும். காணி என்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் உணர்வுபூர்வமான விடயம். மீள்குடியமர்வுக்கான நடவடிக்கைகள் தொடர்பில் தொடர்ந்து பேச்சுக்களை நடத்தி வருகின்றேன். அரசாங்கமும் அந்த விடயத்தில் நேரான சிந்தனையில்தான் உள்ளது. படிப்படியாக காணிகளை விடுவிக்க என்னாலான அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன் என வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண ஆளுநருக்கும் காணி உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பினருக்கும்  இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று  இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் காணி உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், ஒவ்வொரு மாவட்டத்திலும் காணி தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மக்களின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர். வலி. வடக்கில் முன்னைய ஜனாதிபதியின் காலத்தில் 243 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டிருந்தது. அந்தக் காணியை விவசாயக் காணி என்று தவறாக அடையாளப்படுத்துகின்றனர்.

அது மக்களின் குடியிருப்புக் காணி. அந்தப் பகுதியிலுள்ள இராணுவ முகாமும் இன்னமும் அகற்றப்படவில்லை. மக்கள் குடியிருக்கவும் அனுமதிக்கப்படவில்லை.ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்து கொண்ட மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் வலி. வடக்கில் இன்னமும் மீள்குடியமர வேண்டியவர்களின் எண்ணிக்கை தொடர்பில் தவறான தகவல் வழங்கப்பட்டுள்ளது.எமது காணிகளில் பாதுகாப்புத் தரப்பினர் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

இப்போதும் எமது காணிகளுக்குள் பாதுகாப்புத் தரப்பினர் புதிய கட்டடங்களை அமைக்கின்றனர். பலாலி வீதியில், இன்னமும் மூன்று கிலோ மீற்றர்கள் விடுவிக்கப்பட்டாலே மக்களுக்கு முழுமையான நன்மை கிடைக்கும். விமான நிலையத்துக்கு மேலதிகமாக காணிகள் சுவீகரிக்கப்படத் தேவையில்லை. ஏற்கனவே சுவீகரித்த காணிகளே போதுமானது’ என ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டது.