சுதந்திர தினம் கரிநாள்: கிளிநொச்சியில் வெடித்தது போராட்டம்.

 

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நீதி கோரி கிளிநொச்சியில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சுதந்திர தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினரின் ஏற்பாட்டில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணி கிளிநொச்சிச்சி பழைய கச்சேரி வரை முன்னெடுக்கப்பட்டது.

இன்று வரை எந்த நீதியும் இன்றி உள்நாட்டுப் பொறிமுறையால் திட்டமிடப்பட்ட இனப்படுகொலைக்கு நீதி கிடைக்காமல் நாம் சர்வதேச நீதி பொறிமுறையை வேண்டி போராடிக் கொண்டிருக்கிறோம். இக்கரி நாளில் பல விடயங்கள் வலியுறுத்தப்பட்டன. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச நீதி வேண்டும். தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.பௌத்தமயமாக்கல் உடனே நிறுத்தப்பட வேண்டும்.தமிழர் தாயக பிரதேசத்தில் தொடர்ச்சியாக நடந்துவரும் நில அபகரிப்பு உடனே நிறுத்தப்பட வேண்டும்.

தாயக வளத்தை அபகரிப்பது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். தமிழர் தாயக பிரதேசத்தில் இருந்து இராணுவம் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும்.
தமிழின படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணை வேண்டும். சிவில் செயற்பாட்டாளர்கள் மீதான அச்சுறுத்துதல்கள் நிறுத்தப்பட வேண்டும்.

ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவது நிறுத்தப்பட வேண்டும்.எமது நிலம் எமக்கு வேண்டும். தாயகம், தேசியம், அரசியல் சுயநிர்ணயம் என்பன எமது உரிமைகள். அவற்றை உடனே அங்கீகரிக்க வேண்டும்.வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம் என்பது அங்கீகரிக்கப்பட வேண்டும்.சர்வதேசம் வட்டுக்கோட்டை தீர்மானத்தை அங்கீகரிக்க வேண்டும். எமது தலைவிதியை நாமே தீர்மானிக்க சர்வதேச நியமங்களுக்கு அமைய எமது தாயக பிரதேசத்தில் பொது வாக்கெடுப்பு நடத்துமாறு சர்வதேசத்தை கோருகிறோம் என பிரகடனம் வெளியிடப்பட்டது.

இப்போராட்டத்துக்கு வலுச் சேர்க்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், சிவாஜிலிங்கம் முதலான அரசியல் பிரமுகர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.