மீளவும் கலைப்பீட பீடாதிபதியாக பேராசிரியர் ரகுராம் நியமிக்கப்படும் வரை சாத்வீக போராட்டம’ தொடரும்: கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் மனோகரன் தெரிவிப்பு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் ரகுராம் எந்த அடிப்படையில் அந்த பதவியில் இருந்து விலகினாரோ அந்த விடயத்துக்காக உயர்ந்த கௌரவத்தோடு என்ன விடயத்திற்காக பாடுபட்டாரோ அந்த விடயத்திற்கான வெற்றியோடு மீளவும் கலைப்பீட பீடாதிபதியாக நியமிக்கப்பட வேண்டும் என பல்கலை கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மீளவும் கலைப்பீட பீடாதிபதியாக பேராசிரியர் ரகுராம் நியமிக்கப்படும் வரை யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் சாத்வீக ரீதியான போராட்டத்தை முன்னெடுக்கும் என கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் மனோகரன் சோமபாலன் தெரிவித்தார். யாழ் பல்கலையில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இனியும் மௌனம் காத்துக் கொண்டிருக்க முடியாது. இந்த மாணவ ஒழுக்காற்று விசாரணை நடுநிலைப்படி ஒழுங்குமுறைப்படி நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். மாணவர்களுக்கு பிரச்சினை என்றால் இதற்கு பதிலீடான முறைமையை கொண்டு வாருங்கள். அதனை கலைப்பீட நிர்வாகம் செய்யும் என்று பீடாதிபதியால் சொல்லப்பட்டு இருந்தது. ஆனால் 8 மாதங்களாக அமைதியாக இருந்து விட்டு இன்னும் ஒரு வருட மாணவர்கள் வந்துவிட்ட நிலையில் தாங்கள் செய்த பிழைகளை மறைப்பதற்காக செயற்படுவது எந்த வகையில் நியாயம் எனக் கேள்வி எழுப்பினார். மாணவர்களுக்கு பாட சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும்.கலைப்பீட மாணவர் ஒன்றிய நிர்வாக கூட்ட அறிக்கையில் இந்த பிரச்சனை சம்பந்தமாக ஒரு தீர்மானத்தை எடுத்து பீடச் சபையில் அது சம்பந்தமாக காட்சிப்படுத்தி பீடச் சபையின் அனுமதியுடன் மாணவர்களுக்கான வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.
இதற்காக ஏனைய ஐந்து பல்கலைக்கழகங்களின் பாடத் தெரிவுகள் தொடர்பான விடயங்களை ஆய்வு செய்து அதற்கான விடயங்களை செய்ய துறைத்தலைவர்களுடன் கலந்துரையாட நடவடிக்கை எடுத்துள்ளோம். இதேவேளை போதைப்பொருள் சம்பந்தப்பட்ட விடயத்தை பேரவையில் விசாரிக்காமல், மூன்று விசாரணைகளில் உண்மை என்ற நிரூபிக்கப்பட்ட நிலையில் அந்த விடயம் உண்மை என்றால் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் பதவி விலகியதற்கு பேரவை எடுத்த முடிவுதான் காரணம் என்றால் இது வெறுமனே பேராசிரியர் ரகுராமுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த கலைப்பீட சமூகத்திற்கும் மேலே கொடுக்கப்பட்ட கறை. அவமானமாகவே நான் பார்க்கின்றேன்.பல்கலைக்கழகத்துக்கு ஒவ்வொரு மாணவனையும் அனுப்புகின்ற அம்மா அப்பா சகோதரர்கள் மிகவும் அவமானப்படக்கூடிய விடயமாகவே இதனை நான் பார்க்கின்றேன்.
போதைப்பொருள் விடயத்திற்கு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எந்த நம்பிக்கையில் இங்கு பெற்றோர் தமது பிள்ளைகளை அனுப்புவார்கள் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.தற்போது ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு தண்டனை விலக்களிக்க முடியும் என்றால் இதுவரை பல்கலைக்கழகத்தினால் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்ட மாணவர்களுக்கு என்ன பதிலை பேரவையும் பல்கலைக்கழகமும் சொல்லப்போகின்றது.
எந்த தவறிழைத்தாலும் உண்ணாவிரதம் செய்தால் வகுப்பு தடையை விடுத்து உள்ளே வரலாம் என்ற முன்னுதாரணத்தை இந்த பேரவை மேற்கொண்டிருந்தால் என்ன செய்யும் என்ற கேள்வியை நான் எழுப்புகிறேன். பண்பாட்டு அடையாளம், தமிழ் தேசியத்தின் இருதயநாதம் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இவ்வாறான போதைப்பொருள் தொடர்பான செயல்களை அனுமதிக்கின்ற இந்த நிர்வாகம் சமூகத்திற்கு சொல்ல வருகின்றது எனவும் தெரிவித்தார்.