சீமானை நோக்கி ஒரே நாளில் அடுத்தடுத்து பாய்ந்த நான்கு  வழக்குகள்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 5ம் தேதி நடைபெற உள்ளது. இதில் நாம் தமிழர் கட்சி சார்பாக வேட்பாளர் சீதாலட்சுமி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஈரோடு காளைமாட்டு சிலை அருகே பிரச்சாரத்தை தொடங்கி மரப்பாலம், கச்சேரி ரோடு, மண்டபம் வீதி உள்ளிட்ட பகுதிகளில் பேசினார். இந்நிலையில் தேர்தல் அதிகாரியிடம் அனுமதி பெறாமல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் சீமான் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதன்படி காளை மாட்டு சிலை அருகே பிரச்சாரம் செய்ததற்காக சீமான் மற்றும் வேட்பாளர் சீதாலட்சுமி உள்ளிட்ட 35 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதேபோன்று மரப்பாலம் மற்றும் மண்டபம் வீதி ஆகிய இடங்களில் அனுமதி இல்லாமல் பிரச்சாரம் செய்ததால் சீமான் மற்றும் கட்சி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் ஈரோடு பெரியார் நகரில் அனுமதியின்றி பிரச்சாரம் செய்ததால் சீமான் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.