ஆளுநர் ஆர்.என் ரவி அளிக்கும் தேநீர் விருந்து: திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு.


குடியரசு தினத்தையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் கலந்துக்கொள்ளாமல் புறக்கணிக்க உள்ளதாக திமுக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளது. வருகின்ற ஜனவரி 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை குடியரசு நாளன்று அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். இந்நிலையில், இந்த தேநீர் விருந்தை புறக்கணிக்க உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முதலில் அறிவித்தார்.

இதைதொடர்ந்து, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் புறக்கணிப்பதாக அறிவித்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. கடந்த முறை திமுக கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்த நிலையில், அமைச்சர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இம்முறை கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்தாலும், திமுக விருந்தில் பங்கேற்பது குறித்து கடைசி வரை மவுனம் காத்து வருகிறது.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில், அவரது செயல்பாடுகளால் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க முடியவில்லை. சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் வேண்டுமென்றே காலம் தாழ்த்துகிறார். தமிழர்களின் நலன்களுக்கு எதிராகவும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசுக்கு எதிராகவும் செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகளை கண்டிக்கும் வகையில் தேநீர் விருந்தை புறக்கணிப்புதாக தெரிவித்துள்ளார்.