யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில்  கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்:  பொலிஸாரால்  சித்திரவதை என வாக்குமூலம்.

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழப்பதற்கு முன்னர் தனது வாக்குமூலத்தில் பொலிஸாரால் தனக்கு சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கடுமையாக அடித்து துன்புறுத்தப்பட்டதால் சிறுநீரகம் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தார் என்று சட்ட மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் இன்று  நண்பகல் உடற்கூறு பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்ட நிலையில் இந்த அறிக்கையிடப்பட்டுள்ளது.மல்லாகம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் கட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த  25 வயதுடைய நாகராசா அலெக்ஸ்  என்பவரே  இவ்வாறு உயிரிழந்தார்.உயிரிழந்தவரின் சடலம் உடற்கூறு பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை சவ அறையில் வைக்கப்பட்டிருந்தது.

உடற்கூறு பரிசோதனையின் பின்னரே உயிழப்புக்கான காரணம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் அப்பகுதியில் போராட்டம் இடம்பெறலாம் எனும் அச்சுறுத்தின் காரணமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தமை தொடர்பியே இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் மீது அவரது உறவினர்களால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், யாழ்ப்பாணப் பிராந்தியத்துக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், சேவை அவசியம் கருதி இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.