நானுஓயாவில் வீடுகளில் புகுந்த வெள்ள நீர் – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

டி.சந்ரு செ.திவாகரன்

மலையகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழைக்காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 476/ஏ கிரிமிட்டி கிராம உத்தியோகத்தர் பிரிவில் டெஸ்போட் , கிரிமிட்டி, கார்லிபேக் போன்ற பிரிவுகளில் திங்கட்கிழமை (20) பிற்பகல் பெய்த கடும் மழையால் நான்காவது முறையாகவும் நானுஓயா டெஸ்போட் பகுதியில் இருந்து செல்லும் கிளையாறுகள் பெருக்கெடுத்ததன் காரணமாக 4 வீடுகளினுள் வெள்ள நீர் புகுந்துள்ளது.

இதன் காரணமாக வீட்டு பொருட்கள், உணவு பொருட்கள், ஆவணங்கள், பாடசாலை மாணவர்களின் பாடநூல்கள், கால்நடைகள் என அனைத்தும் வெள்ள நீரில் பாதிக்கப்பட்டுள்ளன.

இதில் அதிகமானோர் மழை காரணமாகவும், வெள்ளம் காரணமாக தனது தோட்டங்களில் பயிரிடப்பட்ட மரக்கறி வகைகள் அனைத்தும் வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்டதால் விவசாயிகள் பாரிய நட்டத்துடன் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைகின்றனர்

குறிப்பாக இப்பகுதியில் வசிக்கும் தோட்ட தொழிலாளர்கள் தொடர்ந்து வெள்ளத்தினால் பாதிக்கப்படுவதாகவும் இவ்வாறான நேரங்களில் தம்மை யாரும் கண்டுக்கொள்வதில்லை என்றும் அரசியல்வாதிகள் வாக்கு வாங்குவதற்கு மட்டுமே தம்மை தேடி வருவதாகவும் இவ்வாறான நேரத்தில் தம்மை யாரும் பார்க்க வருவதில்லை என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.