ஜனநாயக வழியில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியும்: நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு.
இலங்கையில் ஜனநாயக வழியில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த மூவின மக்களுக்கும் உரிமை உண்டு என்றும் அதைத் தடுத்து நிறுத்துவது அடிப்படை உரிமை மீறல் என்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்து மீண்டும் ஒரு போரை தமிழ் மக்கள் விரும்பாத நிலையில் அவர்கள் தமது அன்புக்குரியவர்களை அமைதியாக நினைவுகூர்வதற்கு இடமளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த நல்லாட்சிக் காலத்தில் வடக்கு – கிழக்கு மக்கள் அமைதியான முறையில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்திய நிலையில், திலீபன் நினைவேந்தல் நிகழ்வால் இன மோதல் ஏற்படும் என தவறான கருத்தை சிங்கள மக்கள் மத்தியில் எவரும் பரப்பக்கூடாது என்றும் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மூவின அரசியல்வாதிகளும் மக்களின் உறவுப் பாலமாகத் திகழ வேண்டுமே தவிர இவ்வாறான நிகழ்வுகள் மூலம் அரசியல்வாதிகள் சுயலாபம் தேட முற்படக்கூடாது என்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார்.இதேவேளை இந்த நாட்டில் அதிகாரத்தில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு தேவையான உண்மையான முயற்சியை மேற்கொண்டிருக்கவில்லை என்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.