சீதுவை-சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட ஆணின் சடலம்.

நேற்று (15) மாலை பயணப்பொதியில் கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பில்  இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

சடலம் நீல நிற பயணப்பொதியில் வைக்கப்பட்டிருந்ததாகவும் சடலம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்த நபருடையது எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சீதுவை பெல்லானவத்தை, கிந்திகொட பிரதேசத்தில், தன்டுகங் ஓயாவின் கரையோரத்தில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக கிடைக்கப்பட்ட தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது.

உயிரிழந்தவர் 35 முதல் 40 வயதுக்கு இடைப்பட்ட வயதுடைய 05 அடி 08 அங்குல உயரமும் சராசரியான உடலும் 02 அங்குல நீளமான முடியும் கொண்ட ஆண் என பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் சிவப்பு சட்டை மற்றும் பழுப்பு நிற காற்சட்டை அணிந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

உயிரிழந்தவரின் கழுத்தில் வலப்புறம் 07 நட்சத்திர அடையாளங்களுடன் பச்சை குத்தப்பட்டிருந்தமையும், தலை மற்றும் கன்னம் ஆகிய இருபுறங்களிலும் காயங்கள் காணப்பட்டதாகவும் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது..

நீதவான் விசாரணைகளை மேற்கொண்டு சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.