எயார் பிரான்ஸ் விமானத்தில் மொபைல் பற்றரி தீப்பிடித்தது!

நடுவானில் பரபரப்பு

Kumarathasan Karthigesu-பாரிஸ்

பாரிஸில் இருந்து ஆபிரிக்க நாடான கானாவின் தலைநகர் அக்ரா(Accra) நோக்கிப் பறந்துகொண்டிருந்த எயார் பிரான்ஸ் விமானம் ஒன்றில் ஏற்படவிருந்த தீ அனர்த்தம் தக்க சமயத்தில் தடுக்கப்பட்டிருக்கிறது.

நடுவானில் விமானப் பயணி ஒருவரது மொபைல் தொலைபேசியின் லித்தியம் பற்றரி திடீரெனப் புகைந்து எரியத் தொடங்கியது. அதனால் விமானத்துக்குள் தீ பரவும் ஆபத்து ஏற்பட்டது.

ஏயார் பிரான்ஸின் ஏஎப் 914 (AF914) விமானம் ஒன்று கடந்த 21 ஆம் திகதி பாரிஸ் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு மூன்று மணிநேரத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

விமானத்துக்குள் எரிந்து கருகுவது போன்ற வாடையை முகர்ந்த பணிப் பெண் ஒருவர் உடனடியாகத் தனது சக பணியாளர்களுக்குத் தகவலைப் பகிர்ந்து அனைவரையும் உஷார்ப்படுத்தினார். பயணிகள் அனைவரும் தங்களது பொதிகள் மற்றும் பொருள்களைச் சரிபார்த்துக்கொள்ளுமாறு கேட்கப்பட்டனர்.

விமானத்தின் சொகுசுப் பயணப் பிரிவாகிய பிஸினஸ் ஆசனப் பிரிவில் (Business class) உறக்கத்தில் இருந்த பயணி ஒருவரது பற்றரியே புகைந்து கொண்டிருந்தது. அவர் ஆசனத்தில் உள்ள சார்ஜ் ஏற்றும் வசதியைப் பயன்படுத்தித் தனது மொபைல் பற்றரியை சார்ஜில் இணைத்துவிட்டு உறங்கிப்போனார். அது எரிந்து புகையத் தொடங்கியிருந்தது. அருகே இருந்த மற்றொரு பயணி பற்றரி புகைவதைக் கண்டு விமானப் பணியாளர்களை அலறி அழைத்தார்.

அவர்கள் விரைந்து வந்து ஒன்று கூடி தீயணைப்புக் கருவி மூலம் தீயை அணைத்து பற்றரி வெடித்துச் சிதறித் தீ ஏனைய இடங்களுக்கும் பரவ இருந்த பேராபத்தைத் தடுத்து விட்டனர்.

“… புகைகிறது.. எரிகிறது.. என்று பயணிகள் கூச்சல் போட்டதும் விமானம் எரிவதாகவே எண்ணி அதிர்ச்சி அடைந்தேன். ஜன்னல் வழியே வெளியே பார்த்தேன். மிக உச்சத்தில் பறந்துகொண்டிருந்தோம்.. மரண பயத்தை நெருங்கி மீண்டேன்..”

-இவ்வாறு அருகே இருந்த பயணி ஒருவர் தனது திகில் அனுபவத்தைக் கூறினார்.

விமானப் பயணங்களின் போது எலெக்ரோனிக் சாதனங்களது பற்றரிகள் தீப்பிடிக்கின்ற சம்பவங்கள் மிக அரிதாகவே இடம்பெறினும் அவை பேரனர்த்தங்களை ஏற்படுத்தக் கூடிய ஆபத்துக் கொண்டவை. பற்றரிகளை முப்பது வீதம் சார்ஜ் ஏற்றிய நிலையில் வைத்திருப்பதே பாதுகாப்பானது என்று விமானப் பயணப் பாதுகாப்பு விதிகள் வலியுறுத்துகின்றன.